11 மே 2010
விவசாயிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற வணிகவரி உதவி அலுவலர் கைது
திருத்தணி:செங்கல் சூளைக்கான உரிமத்தை புதுப்பிக்க 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை உதவி அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வெள்ளாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகரெட்டி மகன் குப்புசாமி (32). விவசாயியான இவர் செங்கல் சூளை வைத்துள்ளார்.
இதற்கான உரிமத்தை புதுப்பிக்க, திருத்தணி வணிக வரித்துறை அலுவலகத்துக்கு சென்று, உதவி அலுவலர் கருணாகரனை (55) சந்தித்து உரிமத்தை புதுப்பித்து தருமாறு கேட்டார். அதற்கு அவர் 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அவர், இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கலைச்செல்வன், வெங்கடேசன் ஆகியோர் குப்புசாமியிடம் ரசாயனம் தடவிய எட்டு 500 ரூபாய் நோட்டு களை கொடுத்து அனுப்பிவிட்டு, நேற்று மாலை 4 மணியளவில் திருத்தணி வணிக வரித்துறை அலுவலகத்தில் மறைந்து நின்றனர்.
அலுவலகத்துக்குள் சென்ற அவர், உதவி அலுவலர் கருணாகரனிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கருணாகரனை லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக