புதியவை :

Grab the widget  Tech Dreams

11 ஜனவரி 2010

சென்னை- சிபிஐயின் 2009 முக்கிய வழக்குகள்


கடந்த 2009-ம் ஆண்டு மத்திய குற்ற புலனாய்வுத் துறையின் சென்னை ஊழல் தடுப்பு பிரிவு 71 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவற்றில் பொறி வைத்து பிடித்த 12 வழக்குகளும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 16 வழக்குகளும் அடங்கும்.

2009-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஐஏஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகள் அடங்குவார்கள். 81 வழக்குகளில் புலனாய்வு நடத்தப்பட்டுள்ளது. 54 வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்புகள் வழங்கப்பட்டது. வருமான வரித் துறை, இந்திய உணவுக் கழகம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், பிஎஸ்என்எல், ரயில்வே பாதுகாப்பு படை, அஞ்சல் துறை, பல்வேறு பொதுத் துறை வங்கிகளின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் இதில் அடங்கும்.

2009-ம் ஆண்டில் ரூ.ஒரு கோடியே 56 லட்சத்து 85 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்துவதற்காக எஸ்எம்எஸ் இயக்கம் ஒன்று 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலமாக ஊழல் தொடர்பான புகார்களை சிபிஐ-யிடம் தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

2009-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட, புலனாய்வு செய்யப்பட்ட சில முக்கிய வழக்குகளின் விவரம்:

லஞ்சம் பெற்றதாக சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் தனியார் டிராவல் ஏஜென்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் சென்னை மாநகராட்சியில் மூத்த மருத்துவ அதிகாரியான அவரது கணவர் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.5 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னையில் குடியேற்ற பாதுகாவலராகப் பணியாற்றி வந்த இந்திய வருவாய் பணி அதிகாரி மற்றும் இரண்டு தனிநபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அதிகாரி தனது மகனை பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்ப்பதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததும் பலரிடம் இருந்து லஞ்சம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரொக்கமாக ரூ.2.13 கோடியும், ரூ.2.17 கோடி மதிப்பிலான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் மீது முறைகேடு செய்து ரூ.20 கோடி அளவிற்கு சென்னை துறைமுகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தின் துணை பாதுகாவலர் மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் உள்ள கலால் வரித் துறை அதிகாரிகள் 12 பேர் லஞ்சம் பெற்றதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தேசிய நெடுஞ்சாலை எண் 7 மற்றும் 5-ல் பணிகள் நிறைவடையும் முன்பாக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் வழங்கியதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை பொது மேலாளர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அதிகாரிகள் மற்றும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் அறக்கட்டளை மீதும் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

4 கருத்துகள்:

  1. லஞ்சம் குறித்த செய்திகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்
    1. அதிகாரிகளின் லஞ்ச லாவண்யங்களை வெளி கொணர்ந்து சமுதாயத்தில் களை எடுக்க வேண்டும். இந்த உங்கள் நற்செயல் தொடரட்டும்.
    2. இவ்வாறு வெளி வரும் ரிபோர்ட்டுக்குப் பிறகு , அவர்கள் மீது கேஸ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் படுகிறதா என்றும் பின் தொடர்வது அவசியம். அவ்வாறு கொடுக்கப் படும் தண்டனைகளைப் பற்றியும் follow-up ரிபோர்ட் பதிய வேண்டுகிறேன்.
    3. அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் , அரசு ஒரு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பல கேசுகளில் அவ்வாறு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி, கேசு போடாமல் ஆகி அவர்களைத் தப்ப விட்டு விடுகிறார்கள் என்றும் கேள்விப் படுகிறேன். அது உண்மையா?
    ..

    பதிலளிநீக்கு
  2. சென்னை போரூரைச் சேர்ந்த மாதவ் என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் எத்தனை வழக்குகளில் விசாரணையை முடிந்துள்ளனர், எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, தண்டனை பெற்றவர்களின் பெயர் விவரம் போன்றவற்றை கேட்டிருந்தார்.தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தங்களுக்கு விதிவிலக்கு இருப்பதாக கூறி, தகவல்களை தர லஞ்ச ஒழிப்புத் துறை மறுத்து விட்டது. இதையடுத்து தகவல் பெறும் உரிமை கமிஷனிடம் இருவரும் புகார் செய்தனர்.


    இந்த புகாரை மாநில தகவல் பெறும் உரிமை கமிஷன் விசாரித்தது. "மனுதாரர்கள் கோரிய தகவல்கள், ஊழல் வழக்கு சம்பந்தப்பட்டவை. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு இதற்கு பொருந்தாது. எனவே, இந்த தகவல்களை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை மனு தாக்கல் செய்தது.இம்மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். தகவல் கோரியவர்கள் சார்பில் வக்கீல்கள் கிருஷ்ணா ஆனந்த், முத்துபாண்டியன், தகவல் பெறும் உரிமை கமிஷன் சார்பில் சீனியர் வக்கீல் ஜி.ராஜகோபால் ஆஜராகினர். நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:லஞ்ச ஒழிப்பு துறையில் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவில் உள்ள தகவல்களை அளிப்பதற்கு விதிவிலக்கு இருப்பது செல்லும். ஆனால், பொது ஊழியர்கள் மீதான லஞ்ச வழக்குகளை பொறுத்தவரை, அத்தகைய விதிவிலக்கு கோர முடியாது. ஏனெனில், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பான தகவல்களுக்கு விதிவிலக்கு கூடாது என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்ற புள்ளி விவரங்களை தான் கோரியுள்ளனர்.


    ஒரு வெளிப்படையான அரசில் இந்த தகவல்கள் முக்கியமானது.ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அல்லது விடுதலை, எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள, பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. எனவே, இரண்டு வாரங்களில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்களை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கையை துறை எதிர்கொள்ள வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

    பதிலளிநீக்கு
  3. 10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    பதிலளிநீக்கு
  4. அறுபதாயிரம் கேசுகளில் ஐந்நூறு பேருக்கு குறைவாக தண்டனை பெற்றார்கள் என்ற புள்ளி விவரம் பெரிய கதை சொல்கிறது; மேலும், பெரும்பாலும் கிராம ஊழியர்கள் என்பதும் முக்கியமானது.
    அதாவது, எவ்வளவு கேசுகள் பிடிக்கப் பட்டாலும் மிகச் சிறிய கேசுகளிலே மற்றும் மிகத் தாழ்ந்த ஊழியர்களே தண்டனை பெறுகிறார்கள். . குறிப்பாக, அரசியல் வாதிகளை விட, அரசு அதிகாரிகளே இந்த விஷயத்தில் பெரிய குற்றவாளிகள் என்பது ஒரு கருத்து. ஆனால் அவர்கள் தாமும் தப்பிக்கொண்டு, தம் தலைவர்களையும் தப்ப வழி செய்து கொண்டே இருக்கிறார்கள்.
    உயர் நிலையில் உள்ளவர்கள் பெரிய விதிகளில் சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்து, அங்கீகரித்து, பெரிய அளவில் லஞ்சம் பெறுபவர்கள் எப்படி தப்புகிறார்கள் என்பதை follow-up செய்து விதிகளில் நடைமுறைகளில் பேரு மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்; சமூக விழிப்புணர்வு எழ வேண்டும். இது போன்ற வலைப் பதிவுகள் அதைச் செய்ய வேண்டும்

    பதிலளிநீக்கு