
கோயமுத்தூர் : பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத 19 ஆயிரத்து 250 ரூபாய் கைப்பற்றப்பட்டது. சார் பதிவாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.நேற்று இரவு பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையில், சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களுக்கான கட்டணங்களை போலீசார் சோதனை செய்தனர்.
தற்காலிக சார் பதிவாளராக பணியாற்றும் சகுந்தலா என்பவரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத 12 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதே போல, இளநிலை உதவியாளர் விஜயலட்சுமியிடம் 1,700 ரூபாய், அலுவலக உதவியாளர் தியாகராஜனிடம் 1,650 ரூபாய், பதிவு அறையில் இருந்து 3,900 ரூபாய் என, மொத்தம் 19 ஆயிரத்து 250 ரூபாய் கைப்பற்றப்பட்டது.சார் பதிவாளர் சகுந்தலா, விஜயலட்சுமி, தியாகராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். "இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்' என லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர்.
கேட்பாரற்று கிடந்த பணம்: நேற்று மாலை 5.00 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் எட்டு பேர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர். முதலில் அலுவலர்கள் உட்கார்ந்து இருந்த மேஜை டிராயரில் சோதனை நடத்தினர்.
அங்கு கணக்கு காட்டப்படாத தொகையை கைப்பற்றியவுடன், ஆவண அறையில் சோதனை நடத்தினர். அறையின் உட்பகுதியில் 3,900 ரூபாய் தரையில் கிடந்தது. இந்த பணத்துக்கான உரிமையை யாரும் கோரவில்லை. லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்துவது தெரிந்தவுடன் சார் பதிவாளர் அலுவலகத்தை சுற்றி இருந்த சில பத்திரம் எழுதும் அலுவலகங்கள் அவசர, அவசரமாக பூட்டப்பட்டன. .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக