

சென்னை : ஐந்தாவது தூண் சார்பில் "ஊழல் தடுப்பு மற்றும் தகவல் பெறும் உரிமை சட்டம் சேவையை' வலியுறுத்தி, மெரீனா கடற்கரையில் நேற்று மனிதச் சங்கிலி நடைபெற்றது. மனிதச் சங்கிலியை, லயன்ஸ் கிளப் கவர்னர் மணிலால் துவக்கி வைத்தார். சென்னை விமான நிலைய முன்னாள் இயக்குனர் கே.நடராஜன் தலைமை வகித்தார். ஐந்தாவது தூண் ஊழல் தடுப்பு துறையின் இயக்குனர் ஆர்.வி.நம்பி, ஐந்தாவது தூண் தலைவர் விஜய் ஆனந்த், செயல்பாடு துறையின் இயக்குனர்கள் சுப்பிரமணி, பானு ஆகியோர் கலந்து கொண்டனர். மனித சங்கிலியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், சுயஉதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கைகோர்த்து நின்றபடி கலந்து கொண்டனர்.
ஜீரோ ரூபாய் அட்டை பேனரில், "நான் லஞ்சம் வாங்க மாட்டேன்; கொடுக்கவும் மாட்டேன்' என, பொதுமக்கள் கையெழுத்திட்டனர். நேர்மை என்ற பந்தை தழுவி, லஞ்சம் என்ற பந்தை உதைத்துக் காட்டும் நிகழ்ச்சியையும் கடற்கரையில் மாணவ, மாணவர்கள் நடத்திக் காட்டினர்.
"லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். நலிந்து கொண்டிருக்கும் தகவல் பெறும் உரிமை ஆணையத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். தகவல் பெறும் உரிமை ஆணையம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்படுவதற்கு முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்' ஆகிய கோரிக்கைகள் மனிதச் சங்கிலியில் வலியுறுத்தப்பட்டன. லஞ்ச ஒழிப்புக்கு எதிரான பேனர்கள் கடற்கரையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக