புதியவை :

Grab the widget  Tech Dreams

09 ஜனவரி 2010

ஜே.பி.ஜே. நிறுவன அதிபர் கைது?சென்னையை தலைமையிடமாக கொண்டு ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 120 கிளை நிறுவனங்கள் உள்ளன. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனம் பிரபலமாக திகழ்ந்தது. சென்னையில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் ஜஸ்டின் தேவதாஸ்.

சென்னையில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அண்ணாநகர் 18 வது மெயின் ரோட்டில் உள்ளது. வீட்டுமனைகளை விற்பனை செய்வதுதான் இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். 1/4 கிரவுண்டு, 1/2 கிரவுண்டு, 1 கிரவுண்டு, 2 கிரவுண்டு என்று இடங்களை தமிழகம் முழுவதும் சலுகை விலையில் விற்பதாக இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியது. இடங்களை விற்பதற்காக இந்த நிறுவனம் புகழ் பெற்ற தலைவர்களின் பெயரிலும், மக்களை கவரும் இதர பெயர்களிலும் வீட்டுமனை திட்டங்களை அறிவித்தது.

அப்துல்கலாம் நகர், வெற்றி நகர், உழைப்பாளர் நகர் என்றெல்லாம் தங்களுடைய வீட்டுமனை திட்டத்தின்கீழ் நிலங்களை வழங்கும் இடங்களுக்கு பெயர் சூட்டியிருந்தது. கிறிஸ்தவ மக்களை கவருவதற்காக ஏதேன்ஸ் கார்டன்' என்றும் பெயர் வைத்திருந்தார்கள். இந்த நிறுவனத்தில் நிலம் வாங்குபவர்கள் முதலில் ரூ.5 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு எவ்வளவு நிலம் தேவையோ அதற்கு ஏற்றாற்போல் கட்டணம் செலுத்த வேண்டும்.

மக்கள் செலுத்தும் கட்டணத்தை உரிய வட்டியோடு ஒரு ஆண்டில் திருப்பி தந்துவிடுவோம் என்றும், அவர்கள் வாங்கிய நிலத்தையும் சந்தோஷமாக பதிவு செய்து கொடுப்போம் என்றும் பரபரப்பான அறிவிப்பை இந்த நிறுவனம் வெளியிட்டது.

இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் லட்சக்கணக்கில் வரை பணம் கட்டியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரம் பேர் ஜே.பி.ஜே. நிறுவனத்தில் பணம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜே.பி.ஜே. நிறுவனம் திடீரென்று மூடப்பட்டுவிட்டது. சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பெரிய பூட்டு தொங்கியது.

வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்தை வட்டியோடு திருப்பித் தருவதாக சொன்ன அந்த நிறுவனம் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை. இதற்காக வழங்கிய வங்கி காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக ஜே.பி.ஜே. நிறுவனம் மீது புகார்கள் வந்த வண்ணமாக இருந்தது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது பற்றி விசாரித்து வந்தனர். யாரையும் ஏமாற்றமாட்டோம், நாங்கள் சொன்ன வாக்கை காப்பாற்றுவோம்' என்று ஜே.பி.ஜே. நிறுவன அதிபர் ஜஸ்டின் தேவதாஸ், போலீசாருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உறுதி கொடுத்து வந்தார்.

இந்நிலையில், ஜே.பி.ஜே. நிறுவனத்தின் அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் மோசடி வழக்கு ஒன்றில் பெங்களூரில் கைது செய்யப்பட்டதாகவும், அங்குள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வாரமாக தகவல் பரவியது. சென்னை அண்ணாநகரில் உள்ள ஜே.பி.ஜே. நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் மூடப்பட்டு இருந்தது, இதை உறுதி செய்வது போல இருந்தது. இதை கேள்விப்பட்ட ஏராளமான வாடிக்கையாளர்கள் கடந்த 7ஆம் தேதி இரவு அண்ணாநகரில் உள்ள ஜே.பி.ஜே. நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஒரு நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது.

ஜே.பி.ஜே. நிறுவனத்தின் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் எப்போதும் போல நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்' என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பாத பொதுமக்கள் ஏராளமானோர் வெள்ளிக்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு படையெடுத்து வந்தனர். அண்ணாநகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திலும் ஏராளமானோர் குவிந்தனர். நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் கறந்து மோசடி செய்துவிட்டதாக பொதுமக்கள் ஜே.பி.ஜே. நிறுவனத்தின் அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் மீது புகார் கூறினார்கள்.

ரூ.1,000 கோடி வரை சுருட்டிவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் சுமார் 60 பேர் ஜஸ்டின் தேவதாஸ் மீது புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஏற்கனவே ஜே.பி.ஜே. நிறுவனம் மீது 80 பேர் புகார் கொடுத்து உள்ளனர். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஜஸ்டின் தேவதாஸ் உள்பட அவரது ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றும்படி டி.ஜி.பி. ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் இப்போது வந்துள்ள புகார்களும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜஸ்டின் தேவதாஸ் உண்மையிலேயே பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளாரா? என்று தெரியவில்லை. இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்று கூறினார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக