
கூட்டுறவு வங்கிச் செயலருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மேலூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1995-96ம் ஆண்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, சர்க்கரை, மண்ணெண்ணெய் குறைவு, சம்பள பணத்தில் கையாடல், ரசீது இல்லாத செலவு கணக்குகள், பொய் கணக்கு எழுதி பண மோசடி உள்ளிட்ட எட்டு குற்றங்கள் தெரியவந்தது.
கூட்டுறவுத் துறை மாவட்ட துணை பதிவாளர் அளித்த புகாரை அடுத்து, வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவினர், ராஜேந்திரன் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ராஜேந்திரன் மீதான ஏழு குற்ற பிரிவுகளுக்கு, தலா இரண்டரை ஆண்டும், ஒரு குற்ற பிரிவுக்கு ஒரு ஆண்டும் சிறைத் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் சுந்தரராஜன், நேற்று மாலை தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகை 29 ஆயிரம் ரூபாய் செலுத்தவும், அதனை கட்டத் தவறினால் கூடுதலாக 29 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் சுந்தரராஜன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக