புதியவை :

Grab the widget  Tech Dreams

31 ஜனவரி 2010

மேலூரில் லஞ்சம் கொடுக்க வந்த 15 பேர் பிடிபட்டனர் .


மதுரை மாவட்டம் மேலூரில், ரேஷன் பொருட்களுக்கான கூட்டுறவு சார் பதிவாளர், ஆர்.ஐ., டி.எஸ்.ஓ., கிளார்க் போன்றவர்களுக்கு கொடுக்க, 39 ஆயிரத்து 415 ரூபாய் லஞ்ச பணத்துடன் வந்த, 15 ரேஷன் கடை ஊழியர்களை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

மேலூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று ஆய்வு நடத்தினர். மாதக் கடைசி நாளான நேற்று, மேலூர் தாலுகாவில் உள்ள 93 ரேஷன் கடை ஊழியர்களும், தாங்கள் செலுத்த வேண்டிய பணத்துடன் அங்கு வந்திருந்தனர்.
ரேஷன் கடைகளில் உள்ள கார்டுதாரர்களை பொறுத்து, ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை அவர்கள், அதிகாரிகளுக்கு, அன்று லஞ்சமாக கொடுக்க வேண்டுமாம். லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் சிலர் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்தனர்.


ரேஷன் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய தொகை போக, எஞ்சிய பணம் குறித்து, ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதில், கொங்கம்பட்டி ரேஷன் கடை ஊழியர் சந்திரசேகர், 23, 830 ரூபாய் அதிகம் வைத்திருந்தார். கச்சிராயன்பட்டி ஆண்டிச்சாமி 2,400 ரூபாயும், அம்பலகாரன்பட்டி மணிமுத்து 1,450 ரூபாயும் வைத்திருந்தனர். மேலும் 12 பேர், அதிகப் பணம் வைத்திருந்தனர்.

இவர்களிடமிருந்து, 39 ஆயிரத்து 415 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இப் பணத்தை கூட்டுறவு சார்பதிவாளர் ராஜ், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்செல்வி, மற்றும் இரண்டு கிளார்க்குகளுக்கு கொடுப்பதற்கு கொண்டு வந்ததாக, ஊழியர்கள் ஒப்புக் கொண்டனர்.

இவர்களிடம் வாக்குமூலம் பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக