புதியவை :

Grab the widget  Tech Dreams

05 ஜனவரி 2010

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு :ஏர்போர்ட் அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


சென்னை :வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், விமான நிலைய தொழில் நுட்ப மேலாளர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து, சி.பி.ஐ., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை, மீனம்பாக்கம், இந்திய விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆணையத் தகவல் தொழில்நுட்ப மேலாளர் பாஸ்கரன் மீது லஞ்ச தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ., கடந்த 2008ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. கடந்த 2000 ஜனவரி 1ம் தேதி முதல் 2008 மார்ச் 3ம் தேதி வரையிலான காலத்தில் வருமானத்திற்கு மேல் சம்பாதித்த 52 லட்சத்து 17 ஆயிரத்து 248 ரூபாய்க்கு தனது பெயரிலும், தனது தாயாரின் பெயரிலும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கியதாகவும், 28 லட்சத்து 6 ஆயிரத்து 293 ரூபாய்க்கு தகுந்த, திருப்தியான விளக்கம் அளிக்க முடியவில்லை என்று பாஸ்கரன் மீது சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது.



விசாரணையில், அவர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை உண்மை என்று தெரிய வந்துள்ளது. மேலும், 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2008ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வரையிலான காலத்தில் இந்திய விமான நிலைய ஆணைய உதவி மேலாளர், மேலாளர் போன்ற பதவிகளில் பாஸ்கரன் இருந்த போது வருமானத்திற்கு மேல் சம்பாதித்துள்ளார். 2008ம் ஆண்டு ஜூலை 4ம் தேதியன்று கணக்குப்படி 40 லட்சத்து 56 ஆயிரத்து 447 ரூபாயும் 73 பைசா வருமானம் பெற்றுள்ள நிலையில் 39 லட்சத்து 19 ஆயிரத்து 5 ரூபாய் 93 பைசா வருமானம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.



கிடைத்துள்ள விமான நிலைய சாட்சிகள், கிடைத்துள்ள ஆதாரங்கள் ஆகியவற்றின் மூலம் பாஸ்கரன் மீதும் அவரது மனைவி லதா பாஸ்கரன் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இவ்வழக்கிற்கான குற்றப்பத்திரிகை சென்னை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



புகார் செய்ய சி.பி.ஐ., அழைப்பு :ஊழல் புகார்கள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்புவோர் தாராளமாக தங்களை தொடர்பு கொண்டு, தெரிவிக்கலாம் என்று சி.பி.ஐ., அறிவித்துள்ளது. இது குறித்த புகார்களை, "போலீஸ் கண்காணிப்பாளர், சி.பி.ஐ., ஏ.சி.பி., மூன்றாவது தளம், சாஸ்திரி பவன், ஹாடஸ் சாலை, சென்னை-600 006, போன்: 28255899, பேக்ஸ்: 28213828. hobacchn@cbi.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக