
மதுரை மாட்டுத்தாவணி வடக்கு, கே.கே.நகர் மத்திய வட்டார போக்குவரத்து( ஆர்.டி.ஓ.,) அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி, புரோக்கர்களிடம் இருந்த 41 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும், மறைத்து வைத்திருந்த லஞ்ச பணத்தை ஊழியர்கள் வீசி எறிந்தனர்.
நேற்று மாலை 5.40 முதல் இரவு 8 மணி வரை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
மதுரை மத்திய ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் போலீசார் நுழைந்தபோது, பதிவேடுகளில் மறைத்து வைத்திருந்த 10 ஆயிரத்து 710 ரூபாய் லஞ்ச பணத்தை, ஊழியர்கள் தூக்கி எறிந்தனர். புதூரை சேர்ந்த புரோக்கர் முகமதுவிடம் (35) கணக்கில் வராத பணம் 20 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது.விசாரணையில் அவர், ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன புதுப்பித்தலுக்காக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாஸ்கரன், அமிர்தீஸ்வரனிடம் லஞ்சம் கொடுப்பதற்காக வைத்திருந்தாக தெரிவித்தார்.
வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் எழுத்தர் அமலி மற்றும் ஊழியர்கள், போலீசாரை கண்டதும் மேஜை, ஆவணம் மற்றும் பைகளில் மறைத்து வைத்திருந்த பணத்தை கீழே வீசி எறிந்தனர். புரோக்கர்கள் மேலூர் அப்துல் ரகுமான், வடுகபட்டி ரமேஷ், நரிமேடு செந்தில்குமாரிடம் கணக்கில் வராத 5,290 ரூபாய், ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன புதுப்பித்தலுக்கான ஆவணங்கள் இருந்தன. புரோக்கர்கள் சுவாமி, முருகன், மனோஜ் கண்ணனிடம் கணக்கில் வராத பணம் 1,880 ரூபாய் இருந்தது. இங்கு 10 ஆயிரத்து 290, மத்திய அலுவலகத்தில் 31 ஆயிரத்து 210, மொத்தம் 41 ஆயிரத்து 500 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புரோக்கர்கள் முகமது, அப்துல்ரகுமான், ரமேஷ், செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். மற்ற மூன்று புரோக்கர்களிடம் ஆவணங்கள் இல்லாததால், எச்சரித்து அனுப்பினர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க போலீசார் முடிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக