
ரயில்வே துறையில், கருணை அடிப்படையிலான, பணி பெறுவதுக்கு, சட்டரீதியான பரிந்துரை கடிதம் அளிக்க 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருச்சி கோட்ட ரயில்வே சட்டப்பிரிவு அலுவலக தலைமை உதவியாளர் மற்றும் அவருக்கு உதவிய வக்கீல் ஆகிய இருவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஊழியராக பணிபுரிந்தவர் பக்கிரிசாமி. இவர், பணியின் போது இறந்ததால் அவரது மகன் தனசேகரன், வாரிசு அடிப்படையில் ரயில்வே வேலை பெறுவதுக்கு முயற்சி செய்து வந்தார். ரயில்வே விதிமுறைகள்படி வேலை பெறுவதுக்கு, சட்ட ரீதியான பரிந்துரை கடிதம் பெற வேண்டியிருந்தது. அதற்காக கோட்ட ரயில்வே அலுவலக வளாகத்திலுள்ள சட்டப்பிரிவு அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு தலைமை சட்ட உதவியாளராக ஜெயசேகரன், சட்ட ரீதியான பரிந்துரை கடிதம் வழங்குவதற்கு 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். தனசேகரன், இதுகுறித்து சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் செய்தார்.
சி.பி.ஐ., அதிகாரிகளின் ஆலோசனைப்படி, நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் 13 ஆயிரம் ரூபாய் பணத்தை ஜெயசேகரனிடம் வழங்கினார். லஞ்சப்பணத்தை பெற்றுத் தருவதுக்கு, ரயில்வே நிர்வாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக பணிபுரிந்த வக்கீல் ஜெயராமன் உதவினார். அப்போது, அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள், ஜெயசேகரன், ஜெயராமன் இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து, ஜெயசேகரனின் வீட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் சிக்கியதாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட ஜெயசேகரன் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரையும் மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று முன்தினம் இரவு கொண்டு சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக