புதியவை :

Grab the widget  Tech Dreams

02 ஆகஸ்ட் 2009

லஞ்சம் வாங்கியதாக திருச்சியில் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்


திருச்சி: புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக திருச்சியில் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூரைச் சேர்ந்தவர் மணிமாறன்(45); திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை முதல் வாரத்தில் கடையை பூட்டி விட்டு ஊருக்கு சென்று விட்டார். உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து, ஜூலை 19ம் தேதி கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் திருடு போனது தெரிந்தது. சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் மணிமாறன் புகார் அளித்தார். புகாரை பெற்ற எஸ்.ஐ., முத்துக்குமார் ஒருவாரம் கழித்து வருமாறு கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து கடந்த 30ம் தேதி சென்ற மணிமாறனிடம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், 2,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என எஸ்.ஐ., முத்துக்குமார் கேட்டுள்ளார். "உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவ்வளவு பணம் தர இயலாது' என கூறிய மணிமாறனிடம், 1,500 ரூபாய் கொடுத்தால் தான் வழக்கு பதிய முடியும் என எஸ்.ஐ., கறாராக கூறியுள்ளார்.


பணம் கொடுக்க விருப்பமில்லாத மணிமாறன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் அளித்தார். நேற்று மதியம் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் சென்ற மணிமாறன் அங்கிருந்த எஸ்.ஐ., முத்துக்குமாரிடம் அவர் கேட்ட 1,500 ரூபாய் லஞ்ச பணத்தைக் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏ.சி., அம்பிகாபதி தலைமையிலான குழுவினர், லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., முத்துக்குமாரை கைது செய்தனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக