அறந்தாங்கி, நவ.28-
பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டாக சேது பணியாற்றி வருகிறார். இவரை தஞ்சாவூர் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அமைப்பாளர் மாதவன் மற்றும் பொது செயலாளர் ஏ.எச்.அமீர்ஜான் ஆகிய 2 பேரும் கடந்த 7-ந்தேதி அன்று சந்தித்து பேசினார்கள்.
அப்போது பொன்ன மராவதியை சேர்ந்த ராமசாமி, நமணசமுத்திரத்தை சேர்ந்த லெனின், நற்சாந்துபட்டியை சேர்ந்த அஜீஸ், காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியை அருள் சகோதரி ஜோஸ் ஆகிய 4 பேரும் போலி டாக்டர்கள் என்றும், இவர்கள் கிளீனிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அத்துடன் அவர்கள் போலி டாக்டர்கள் என்பதற்கான ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக போலீஸ் துணை சூப்பிரண்டிடம் கொடுத்தார்கள்.
இதை கேட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சேது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
உடனே 2 பேரும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு கோவிந்தராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் இன்பரசன் ஆகியோர் பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு சேது அலுவலகத்துக்கு சென்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்ததும் மாதவன் மற்றும் அமீர்ஜான் ஆகிய 2 பேரும் மாடியில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று போலீஸ் துணை சூப்பிரண்டு சேதுவிடம் ரூ.2 ஆயிரத்தை கொடுத்தனர். உடனே லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கோவிந்தராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் இன்பரசன் ஆகியோர் மாடியில் உள்ள அலுவலகத்துக்கு விரைந்து சென்று ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு சேதுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக