21 நவம்பர் 2009
கிருஷ்ணகிரி மாமூல் போலீசார் !
உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், சிறப்பு சுற்றுக்காவல் படையினரும், மாமூல் வசூலுக்காக மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு, அமோகமாக அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனால், கடத்தல்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து, ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி, அங்குள்ள நவீன அரிசி ஆலைகளில், பாலிஷ் செய்யப்பட்டு, மீண்டும் அதிக விலைக்கு தமிழகத்தில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இதனால், அரிசி கடத்தலில் ஈடுபடுவோர், அதிகளவில் லாபம் ஈட்டி வந்தனர். பெரும்பாலான அரிசி கடத்தல் காரர்கள், முக்கிய அரசியல் புள்ளிகளின் தயவோடு செயல்பட்டு வந்தனர்.அரிசி கடத்தல் அதிகரித்து வந்த வேளையில், உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து செயலாற்ற, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு சுற்றுக்காவல் படை அமைக்கப்பட்டது.இதில், ஒரு எஸ்.ஐ., மற்றும் நான்கு ஏட்டுகள் பணி அமர்த்தப்பட்டனர்.
சிறப்பு சுற்றுக்காவல் படையினர், மாநில எல்லை பகுதி, செக் -போஸ்ட்கள் மட்டுமன்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ரோந்து சுற்றி வந்து, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.ஓராண்டுக்கும் மேலாக, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, கர்நாடக மாநிலத்துக்கு செல்லும், ஒரு கடத்தல் லாரியை கூட, உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாரும், சிறப்பு சுற்றுக்காவல் படை போலீசாரும் பிடிக்கவில்லை.இதற்காக, அரிசி கடத்தலில் ஈடுபடுவோர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவனித்து விடுகின்றனர். தங்களை ஒரு செக் - போஸ்ட்டில் அமரவைத்து விட்டு, மற்ற செக் - போஸ்ட் வழியாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அரிசி கடத்தல் லாரிகளை கர்நாடகாவுக்கு அனுப்பி விடுவதாக, சிறப்பு சுற்றுக்காவல் படையினர் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர்.
சிறப்பு சுற்றுக்காவல் படை போலீசார் அரிசி கடத்தலை தடுக்காமல், அந்தந்த பகுதியில் மணல் மற்றும் கற்களை ஏற்றி வரும் டிராக்டர்களை நிறுத்தி பணம் வசூல் செய்வதாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உயர் அதிகாரிகளிடம் குற்றம் சாட்டியுள்ளனர். உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், சிறப்பு சுற்றுக்காவல் படையினரும், தற்போது, மாமூல் வசூலுக்காக மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகாவுக்கு, அமோகமாக அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனால், கடத்தல்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக