02 நவம்பர் 2009
தினகரன் பதவி உயர்வு: இன்னும் முடிவெடுக்கவில்லை- தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்
புது தில்லி, நவ. 1: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தும் விவகாரம் குறித்து இன்னும் முடிவேதும் எடுக்கவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் அகில இந்தியக் கூட்டம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் தினகரன் குறித்து மேற்கண்டவாறு தெரிவித்தார். தினகரன் தவிர்த்து, மற்ற 4 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் தாங்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்துள்ளதாகப் புகார் எழுந்ததை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவரை பதவி உயர்த்தும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளதே என்று கேட்டதற்கு, இல்லை, இல்லை. தினகரன் விவகாரத்தில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் கே.ஜி.பாலகிருஷ்ணன். கருத்து சொல்ல விரும்பவில்லை: மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் கூட்டத்தில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, நாட்டின் பல்வேறு அரசமைப்புகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. எனினும், அவை குறித்து கருத்தேதும் சொல்ல விரும்பவில்லை என்றார். தினகரன் பதவி உயர்வு குறித்து கேட்டதற்கு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆதாரத்தின் அடிப்படையில் சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் இதுகுறித்து பதில் ஏதும் சொல்வதற்கில்லை என்றார் வீரப்ப மொய்லி. புகார் எதிரொலி: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி. தினகரன், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.பட்நாயக், பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், மேற்கு வங்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எஸ். நிஜார், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேரையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழுவும் அனுமதி அளித்தது. இந்நிலையில் பி.டி. தினகரன் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து வாங்கிக் குவித்துள்ளதாகப் புகார் எழுப்பி, அவரை பதவி உயர்த்துவதற்கு எதிராக நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் போர்க்கொடி தூக்கினர். தினகரன் பணியாற்றும் கர்நாடகத்திலும் அவரை பதவி உயர்த்துவதற்கு எதிராக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பி.டி. தினகரனை பதவி உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக