18 நவம்பர் 2009
சுனாமி நிதியில் மோசடி: தென்னிந்திய திருச்சபை மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சுனாமி நிதியில் தென்னிந்திய திருச்சபை மோசடி செய்துள்ளதால் தாங்கள் அளித்த சுனாமி நிதியை வட்டியுடன் திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்று கோரி நியூயார்க்கை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
நியூயார்க்கை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றின் அதிகாரி ராபர்ட் ராடெக்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக எங்களுடைய அமைப்பு நிதி திரட்டியது.
18 கோடியே 27 லட்ச ரூபாய் நிதியை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபைக்கு 2005ஆம் ஆண்டு வழங்கினோம். ஆனால் சி.எஸ்.ஐ. அமைப்பு இதனை முறையாக பயன்படுத்தவில்லை.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. மேலும் நிதி செலவிட்டதற்கு கணக்கு கேட்டபோது அவர்கள் கணக்கு கொடுக்கவில்லை. இது குறித்து சென்னை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தோம்.
சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ராபர்ட் சுனில், பெனிடிகா சத்தியமூர்த்தி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சுனாமி நிதியில் மோசடி செய்துள்ளதால் நாங்கள் அளித்த நிதியை 24 சதவீத வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்க தென்னிந்திய திருச்சபைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, இது குறித்து பதில் அளிக்கும்படி தென்னிந்திய திருச்சபைக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக