19 நவம்பர் 2009
ஏற்றுமதி ஊக்கத் தொகை திட்டத்தில் 3.6 கோடி ரூபாய் மோசடி திருப்பூர் தொழிலதிபர்கள் உட்பட நால்வர் கைது .
திருப்பூர் : போலி ஆவணம் தாக்கல் செய்து, ஏற்றுமதி ஊக்கத் தொகை (டிராபேக்) திட்டத்தில் 3.6 கோடி ரூபாய் மோசடி செய்த, திருப்பூர் தொழிலதிபர்கள் உட்பட நான்கு பேரை சி.பி.ஐ.,கைது செய்தது. திருப்பூர் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் ராம்சேனாதிபதி(35). கோவைப்புதூரைச் சேர்ந்த நண்பர் குருபகதூர்(39) என்பவருடன் சேர்ந்து திருப்பூரில் வெல்நோன் எக்ஸ்போர்ட் எனும் ஏற்றுமதி நிறுவனத்தை 1991 முதல் நடத்துகிறார்.
கடந்த 2002 - 2003ம் ஆண்டில் இந்நிறுவனம் தயாரித்த ஆடைகள் அதிகளவில் ரஷ்யா, பனாமா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால், இந்நிறுவனம் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் ஊக்கத்தொகை பெற்றது. இதில், சந்தேகம் ஏற்பட்டதால் மத்திய சுங்கத்துறை சார்பில், சி.பி.ஐ.,ல் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை சி.பி.ஐ.,சிறப்பு குழு விசாரணை மேற்கொண்டதில், போலி ஆவணம் தயாரித்து, 3.6 கோடி ரூபாய் டிராபேக் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இம்மோசடி தொடர்பாக, எக்ஸ்போர்ட் கம்பெனி நிர்வாகிகள் ராம்சேனாதிபதி, குருபகதூர் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த திருப்பூர் காந்திநகரைச் சேர்ந்த முரளி(32), சென்னை,கொளத்தூரைச் சேர்ந்த குருநாதன்(50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று, கோவை சி.பி.ஐ.,சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரையும் வரும் டிச.,2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட நால்வரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக