திருச்சி, பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி , சார் பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், திருச்சியில் மூவரைப் பிடித்து போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.திருச்சி கோட்டை பகுதியில், சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீஸ் குழுவினர் அதிரடியாக நேற்று மாலை அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. போலீசாரைக் கண்டதும் பணத்தை ஜன்னல் வழியே தூக்கி எறிந்துள்ளனர்.இதில், பத்திர எழுத்தர் தினகரன், அலுவலக உதவியாளர் குருமூர்த்தி, துப்புரவு பணியாளர் சண்முகநாதன் ஆகிய மூவரைப் பிடித்து விசாரித்தனர். சரியான தகவல் கூறாததால், அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதே போல், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சார் பதிவாளர் அலுவலகம் எண் இரண்டில், நேற்று மாலை 4.25 மணிக்கு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ரெங்கராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், தனி தாசில்தார் மோகன், உதவியாளர் ஞானசூரியன், ஏட்டுகள் கந்தப்பன், செல்வராஜ், செல்வம், ராஜமாணிக்கம், ராமச்சந்திரன் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.இரவு 7 மணிக்கு மேலும் தொடர்ந்து சோதனையில் பதிவுறு எழுத்தர் குலோத்துங்கனிடம் 2,000 ரூபாய், அலுவலக உதவியாளர் உலகநாதனிடம் 560 ரூபாய், எழுத்தர் நாடிமுத்துவிடம் 800 ரூபாய், ஓய்வு பெற்ற எழுத்தர் சவுந்தரபாண்டியனிடம் 2, 400 ரூபாய், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்ரஹீமிடம் பத்தாயிரத்து 430 என 16 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இந்த தொகைகளுக்கு அவர்கள் உரிய விபரம் கூறினால் பிரச்னைகளில் இருந்து தப்பலாம். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், பல பதிவு ஆவணங்களை எடுத்து விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வரை அஞ்சனகுமார் என்பவர் சார் பதிவாளராக பணி செய்தார். இவர் மாற்றம் செய்யப்பட்டார். நேற்று கந்தசாமி என்பவர் புதிய சார் பதிவாளராக பொறுப்பேற்றார்.இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு நாகை லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., மாணிக்கவாசகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சித்திரைவேல் மற்றும் குழுவினர் இந்த அலுவலகத்துக்குள் திடீர் சோதனை நடத்தினர். அலுவலக கதவுகளை மூடிவிட்டு ஒவ்வொரு அலுவலர்களிடமும் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் கிடைத்த பணம் குறித்த விவரம் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக