24 நவம்பர் 2009
ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் 10 அதிகாரிகள் முறைகேடு கண்டுபிடிப்பு
சென்னை விமான நிலைய சுங்கத்துரை அலுவலகத்தில் நேற்று இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.9 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது. 10 அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆவணங்கள் சிக்கின. தொடர்ந்து இந்த சோதனை நடப்பதால, விமான நிலையத்தில் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் திடீரென வந்தனர். கார்க்கோ பகுதிக்கு வந்த அவர்கள், வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் பிரிவு, வெளிநாடுகளில் இருந்து பார்சல் வரும் பகுதி மற்றும் கார்கோவில் உள்ள சுங்கத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை தொடங்கினர்.
முதலில், இப்பகுதியில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள், கடைநிலை சிப்பந்திகள் உட்பட யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்களது செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்Õ செய்யும்படி கூறினர். லேன்ட் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. பின்னர், கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து என்னென்ன பார்சல்கள் வந்துள்ளன, அதற்கு போடப்பட்ட வரி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கார்கோ பகுதியில், மிக முக்கியமான 12 நிறுவனங்கள், பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அந்த நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் ஏதாவது வழங்கப்பட்டதா, அன்பளிப்பு மற்றும் லஞ்சம் பெறப்பட்டுள்ளதா என்பது பற்றியும் தீவிரமாக ஆய்வு நடத்தினர். வழக்கமாக இதுபோன்ற சிபிஐ சோதனை இங்கு நடப்பது வழக்கம். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சோதனை நடத்தி விட்டு சென்று விடுவார்கள். ஆனால் இந்த முறை, நேற்று இரவு தொடங்கிய இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
12 மணி நேரத்துக்கும் மேல் நீடிப்பதால் சுங்கத்துறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இன்று காலை வரை ரொக்கப்பணம் ரூ.9 லட்சம் சிக்கியுள்ளது. 10 சுங்கத்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ‘வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை வரி விதிப்பது வழக்கம்.
ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் குறைத்து வரி போட்டு விட்டு ஒரு கணிசமான தொகையை அன்பளிப்பாக பெற்றுக்கொண்ட பணம்தான் ரூ.9 லட்சம் என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணையும், சோதனையும் நடந்து வருகிறது. ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல வலைப்பதிவு. உங்கள் வலைப்பதிவு அதிக மக்களை சென்றயடய வேண்டும்.
பதிலளிநீக்குhttp://snehiti.blogspot.com