05 நவம்பர் 2009
பட்டா வழங்குவதற்கு அலைக்கழிப்பு : சேலம் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றும் குழந்தைவேலுவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்
பட்டா வழங்குவதற்கு அலைக்கழிப்பு செய்ததற்காக தற்போது சேலம் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றும் குழந்தைவேலுவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தையடுத்த காடூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (71). இவர் கடந்த 1998ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அலமேலு என்பவரிடமிருந்து 17 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.
இந்நிலத்திற்கு பட்டா வழங்கும்படி,அப்போதைய குன்னம் தாசில்தார் குழந்தை வேலுவிடம் மனு வழங்கியுள்ளார். ஆனால் ராமலிங்கத்திற்கு பட்டா வழங்காமல் குழந்தை வேலு தொடர்ந்து இழுத்தடித்துள்ளார்.
இதையடுத்து 21.6.2005ம் அன்று இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு ராமலிங்கம் மனு செய்தார். மனுவை ஆராய்ந்த முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம், ராமலிங்கத்திற்கு பட்டா வழங்க ஆவண செய்யும்படி பெரம்பலூர் ஆர்.டி.ஓ.,விற்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 27.8.2005 அன்று, ராமலிங்கத்திற்கு பட்டா வழங்கும்படி பெரம்பலூர் ஆர்.டி.ஓ., அப்போதைய குன்னம் தாசில்தார் குழந்தைவேலுவுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவையும் அலட்சியப்படுத்தினார் குழந்தைவேலு.
இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதன்படி பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு செய்த குழந்தை வேலுவுக்கு, சேவைக்குறைபாடு மற்றும் அலைக்கழிப்பு ஆகிய செயலுக்காக ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும், 3 மாதத்தில் ராமலிங்கத்துக்கு பட்டா வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டது. குழந்தைவேலு தற்போது சேலம் ஆர்.டி.ஓ.,வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக