மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :
நாட்டின் அரசியல் மற்றும் சமூக அடிப்படையை ஊழல் சீரழித்து வருகிறது. மதுகோடா மட்டுமல்ல நாட்டின் பல்வேறு முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்தும் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுக்குழு (சிபிஐ), நீதித்துறை ஆகியவை இத்தகைய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 330 பேர் கோடீஸ்வரர்களாக திகழ்கிறார்கள். நமது தேர்தல் முறையை பணம் என்னும் கருப்பு நிழல் ஆக்கிரமித்துள்ளது. தொடக்கத்தில் அதிகார பலமும், பின்னர் குற்றவாளிகளும் அரசியலை ஆட்டிப்படைத்தனர். தற்போது பணபலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாக மாறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தலைமையிலான 'பெல்லாரி சுரங்க மாபியா கும்பல்' மாநில அரசை நிலைகுலையச் செய்ய அச்சுறுத்தி வருகிறது. ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த மாபியா கும்பலுடன் தொடர்புள்ளது. காங்கிரஸ், பாஜக ஆகிய இருகட்சிகளும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவ்வாறு ஏ.பி. பரதன் தனது பேட்டியில் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக