சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருந்து முதல்வரானதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா. இவர், முதல்வராக இருந்த காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் இவரது வீட்டில் அதிரடி சோதனையிட்ட பின் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 25ம் தேதி துவங்குகிறது.
தற்போது, லோக்சபா எம்.பி.,யாக உள்ள மதுகோடா, நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தனது மனைவி கீதாவை, சிங்பும் மாவட்டம் ஜகன்னாத்பூர் தொகுதியில் நிற்க வைத்துள்ளார். இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மது கோடா குறிப்பிடுகையில், "பல ஆயிரம் கோடி ஹவாலா பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக என் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் அடிப்படையில்லாதவை. என் மீது கூறப்பட்ட இந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். நடைபெற உள்ள தேர்தலில் என் நற்பெயரை குலைப்பதற்கான முயற்சியில் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது அவதூறு வழக்குகளை தொடருவேன்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக