18 நவம்பர் 2009
ரூ 500 லஞ்சம் : செக்கானூரணி சார்பதிவாளர் எழுத்தர் கிரிதரன் கைது
பத்திர நகல் வழங்க, லஞ்சம் வாங்கிய மதுரை மாவட்டம் செக்கானூரணி சார்பதிவாளர் அலுவலக தலைமை எழுத்தர் கிரிதரன், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே, நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் சின்னன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களது பெயரில், மூன்று இடங்களில் நிலங்கள் உள்ளன.
இவர்களது மகன்கள் பாண்டி(35), மகேஷ் பாண்டி. இருவரும் பெற்றோர் பெயரில் உள்ள நிலங்களை, பாகப்பிரிவினை செய்ய முடிவு செய்தனர். இந்த நிலங்களுக்கான ஒரிஜினல் பத்திரங்கள், பாண்டியம்மாளிடம் உள்ளது. நிலங்களின் விவரம் தெரிந்து கொள்ள விரும்பிய பாண்டி, நகல் பத்திரங்கள் வழங்குமாறு, நவ.11ல் செக்கானூரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் கேட்டார்.
தலைமை எழுத்தர் கிரிதரன், மூன்று நிலங்களின் பத்திர நகல்களுக்கு கட்டணம் 200 ரூபாய்; லஞ்சமாக 700 ரூபாய் சேர்த்து, 900 ரூபாய் கொடுத்தால் தான், நகல்களை தரமுடியும் என்றார். அலுவலகத்திற்கு, 16ம் தேதி சென்ற பாண்டி, நகல் கட்டணம் 200 ரூபாயும், லஞ்சம் 200 ரூபாயும் தருவதாக கூறினார். அதற்கு கிரிதரன் மறுத்து விட்டார்.
பாண்டி மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய 700 ரூபாயும், பவுடர் தடவாத 200 ரூபாயும் பாண்டியிடம் கொடுத்தனுப்பினர். பணத்தை பெற்றுக்கொண்ட கிரிதரன், லஞ்சமாக 500 ரூபாய் போதும் என்று கூறி, 200 ரூபாயை திருப்பி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிரிதரனை கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக