மதுகோடாவின் தந்தை ஓலை குடிசையில் ! மகனோ இன்று நாடு முழுவதும் வாங்கிய பங்களாக்களில் !
கோடி கோடியாய் சம்பாதித்த மதுகோடாவுக்கு இன்று நாடு முழுவதும் பங்களாக்களும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. ஆனாலும் மதுகோடாவின் தந்தை இன்னும் ஓலை குடிசையில்தான் வசிக்கிறார்.
மதுகோடா பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். தந்தை பெயர் ராசிகா கோடா, தாயார் கூனி கயூ, சிங்பூப் மாவட்டத்தில் உள்ள குவா கிராமம்தான் மது கோடாவின் சொந்த ஊர்.ஓலை குடிசையில்தான் மதுகோடா பிறந்தார். அந்த வீடு இன்னும் உள்ளது. அதில் தந்தை வசித்து வருகிறார். 6.7.1971-ல் பிறந்த மது கோடா பள்ளிப்படிப்பை முடித்தார்.
அப்போதே அரசியலில் ஈடுபாடு வந்தது. ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தில் சேர்ந்து செயல்பட்டார். அப்போது ஜன்னல்களுக்கு கிரில் செய்யும் வெல்டிங் தொழிலாளியாகவும் இருந்து வந்தார்.2000-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவருக்கு பாரதீய ஜனதாவில் டிக்கெட் கிடைத்தது. ஜகநாத்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாபுலால் மராட்டி தலைமையிலான பாரதீய ஜனதா அரசில் மந்திரி பதவியும் கிடைத்தது.
இதுதான் அவருக்கு வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. மந்திரி பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவும் தவறவில்லை.
2005 சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை. சுயேச்சையாக நின்று மதுகோடா வெற்றி பெற்றார். அப்போதும் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது. சுயேச்சையாக இருந்த மதுகோடா ஆதரவு அளிக்க முன் வந்தார். அவருக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைத்தது.
இடையில் பாரதீய ஜனதா அரசை கவிழ்த்து விட்டு வெளியே வந்தார். அவரே முதல்- மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தது. 2006-ல் முதல்- மந்திரி ஆனார். அவருக்கு காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் ஆதரவு அளித்தன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் ஆட்சியை இழந்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியலில் இருந்த இந்த கால கட்டத்தில்தான் இவ்வளவு சம்பாதித்து இருக்கிறார்.
இவருக்கு கீதா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மதுகோடா அரசியலில் இருந்த காலத்தில் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் படித்து பட்டமும் பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக