விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுக்கு லட்சக் கணக்கில் லஞ்ச பணத்தை வாங்கி கொடுக்கும் 50 ஏஜெண்டுகள், சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரும் சரக்குகளை லஞ்சம் வாங்கிக் கொண்டு சுங்க இலாகா அதிகாரிகள் அனுமதித்து வருவதாக சி.பி.ஐ.க்கு ஏராளமான புகார்கள் வந்தது.
அதன் அடிப்படையில் 50 சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி குவித்த சுங்க இலாகா அதிகாரிகள், பாஸ்கர், அறிவு டைநம்பி, நாகேஸ்வரி, பழனியப்பன், ஜக்மோகன், ஆசைத்தம்பி, மஞ்சுளா, பெஞ்சமின், கண்ணன் ஆகிய 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கும் ஏஜெண்ட் குமார் சிக்கியிருந்தார்.
லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் ரூ.17 லட்சம் ரொக்கப் பணம், ரூ.25 லட்சம் நகைகளும் பறிமுதல் செய்தனர். பெரும்பாலான அதிகாரிகள் தங்கள் லாக்கரில் பணம், நகைகளை வைத்திருக்கவில்லை. 2 லாக்கர் மட்டும் திறந்து சோத னையிடப்பட்டது. அதில் சில சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளது.
இது குறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சீனாவில் இருந்து குழந்தைகளின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மட்டமான பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் பொம்மைகள், சிங்கப்பூர், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் அவற்றிற்குள் போதை பொருட்கள் கூட இருக்கலாம். கூரியர் பார்சல்கள், என பெரும்பாலான பார்சல்களை சோதனை செய்யாமல் இறக்குமதி செய்வது என்பது கடத்தல் குற்றத்திற்கு சமமானது.
அத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்களை தாராளமாக லஞ்ச, பணத்தை பெற்றுக்கொண்டு மேற்கண்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை பகிர்ந்து கொடுப்ப தற்கென்றே சென்னையில் மட்டும் குமார் போல 50 ரகசிய ஏஜெண்டுகள் செயல் படுகின்றார்கள். இவர்களின் வேலை வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களில் ரகசிய எண்ணை குறித்து விடுவார்கள். அது இருக்கும் சரக்கு பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்யாமல் அனுப்பி விடுவர்.
அவர்களுக்குரிய லஞ்ச பணத்தை வீடு களுக்கு சென்றோ, அல்லது அவர் களது ரகசிய வங்கி கணக்கிலோ ஏஜெண்டுகள் கட்டி விடுகின்றார்கள். அந்த பதவிகளுக்கு தகுந்தாற்போல் தினந்தோறும் லஞ்ச பணம் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் தினந்தோறும் ரூ.10 லட்சம் வரை கைமாறியுள்ளது.
பெண் அதிகாரிகளை கவருவதற்கு நவீன மாடல்களில் வடிவமைக்கப்பட்ட தங்க நகைகளை ஏஜெண்டுகள் கொடுத்துள்ளனர். அதிகாரிகளின் செல்போன் சிம்கார்டை ஆய்வு செய்ததில் ஏராளமான ஏஜெண்டுகளின் செல்போன் நம்பர்களும், பெயர்களும் கிடைத்துள்ளது. அவர்களை கண்காணித்து வருகிறோம்.
ஏஜெண்டுகள் பெரும்பாலும் விமான நிலையத்திற்கு வராமலேயே அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். ஆனால் குமார் மட்டும் கொஞ்சம் அதிகமாக நேரடியாக வந்து விமான நிலையத்திலேயே கந்து வட்டிகாரர் போல வசூலில் ஈடுபட்டதால் எளிதில் சிக்கி விட்டார். தப்பி ஓடிய ராஜ்குமார் என்வரை தேடி வருகிறோம். அவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ.6 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து சுங்க இலாகாவில் பணிபுரியும் வேறு சில அதிகாரிகளையும் கண்காணித்து வருகிறோம். ஏஜெண்டுகளிடம் பேசுகிறார்களா? என்பதையும், ஆய்வு செய்து வருகிறோம். வருங்காலங்களில் விமான நிலையத்தில் கடத்தல்காரர்களுக்கு உதவும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
சுங்க இலாகா கமிஷனர் பெரியசாமி கூறியதாவது:-
ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சுங்க இலாகாவிலேயே தனி அமைப்பு உள்ளது. அதன் மூலம் அவ்வப் போது லஞ்ச புகாருக்கு உள்ளாகும் அதிகாரிகள் மீதுசஸ்பெண்ட், துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்சம் பெறும் முறைகேடான அதிகாரிகளை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் லஞ்சம் கேட்கும் சுங்க இலாகா அதிகாரிகள் பற்றி புகார் செய்ய விரும்புவோர் போலீஸ் சூப்பிரண்டு, சி.பி.ஐ., ஏ.சி.பி., மூன்றாவது தளம், சாஸ்திரி பவன், ஹாட்டவ்ஸ் சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கும், splacchne.cbi.gov.in என்ற இணைய தள முகவரிக்கும், 044-28255899 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 044-28213828 என்ற பேக்ஸ் எண்ணிலும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கைதான சுங்க இலாகா அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 அதிகாரிகளும் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக