புதியவை :

Grab the widget  Tech Dreams

08 நவம்பர் 2009

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதரவற்ற விதவைகளிடம் தேவையற்ற ஆவணங்களை கேட்டு அலைக்கழிப்பு


தமிழக அரசு ஆதரவற்ற முதியோர், ஊனமுற்றோர், விதவைகள், விவசாயத் தொழிலாளர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.400 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த உதவித் தொகைகள் பெற விண்ணப்பத்துடன் மருத்துவச்சான்று, கிராம நிர்வாக அலுவலர் சான்று, நில வருவாய் ஆய்வாளர் சான்று பெற்று நலிந்தோர் நலத்திட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த அதிகாரியின் பரிசீலனைக்குப் பின்னர் விண்ணப்பதாரருக்கு உதவித்தொகை வழங்குவது நடைமுறை.

ஆனால், அவிநாசி நலிந்தோர் நலத் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டத்தில் உதவித்தொகைகள் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் கூடுதலாக விதவை சான்றும், விண்ணப்பதாரரின் பெயர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதா என்பதற்கான உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து பெற்ற சான்றும் கேட்டு தேவையின்றி அலைக்கழிப்பு செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளன.

பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும்போதே கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் பரிந்துரையுடன் அளிக்கும்போது இந்த 2 சான்றுகளும் கேட்டு அலைக்கழிப்பது இத்திட்டத்துக்கு முரணானதாகவும், விண்ணப்பதாரர்களை விரட்டும் போக்காகவும் உள்ளது என்றார் ஊத்துக்குளி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ., செயலர் ரா.குமார்.

இதுதவிர உதவித்தொகை பெற தேவையான தகுதியிருந்தும் சம்பந்தப்பட்ட 2 சான்றிதழ்கள் இணைக்காததால் விண்ணப்பங்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் போக்கும் தொடர்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, ஆதவரவற்ற விதவை உள்ளிட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்பவர்களை அரசாணைக்கு முரணாக புதியபுதிய ஆவணங்களை கேட்டு அலைக்கழிப்பு செய்வதை தடுக்கவும், அத்திட்டத்துக்கான மனுக்களை முறையான பதிவேடுகளில் பதிந்து அத்தாட்சி வழங்கிடவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அக்கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக