02 நவம்பர் 2009
லஞ்சம் வாங்கிய எம்.கே.பி., நகர் எஸ்.ஐ., குணவதி கைது .லஞ்சத்தை கொடுத்துவிட்டு ரேஷன் கார்டை வாங்கிப் போ !
சென்னை : குடும்பத் தகராறில் சமாதானம் செய்து வைத்த மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., கணவன் மீது எப்.ஐ.ஆர்., போடாமல் இருக்க, லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார்
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 39வது தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜ்(52). இவரது மனைவி வெரோனியாவுக்கும், இவருக்கும் இடையே கடந்த 28ம் தேதி இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது கணவர் தன்னை அடிப்பதாக வெரோனியா, 30ம் தேதி எம்.கே.பி., நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, 31ம் தேதி ஜோசப் ராஜை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர்.ஜோசப் ராஜ், வெரோனியா இருவரிடமும் விசாரணை நடத்திய எம்.கே.பி., நகர் எஸ்.ஐ., குணவதி, இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்து, எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளார்.
போலீஸ் நிலையத்திலிருந்து ஜோசப் ராஜ் வெளியே செல்லும் போது, அவரை அழைத்த எஸ்.ஐ., குணவதி, "உன் மேல் எப்.ஐ.ஆர்., போடாமல் இருந்ததற்காக, 1,500 ரூபாய் தர வேண்டும்' என கூறியுள்ளார்.தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் ஜோசப் ராஜ், "என்னிடம் அவ்வளவு பணம் இல்லை' என கூறியுள்ளார். உடனே எஸ்.ஐ., குணவதி ஜோசப் ராஜிடம், "நீ பணம் தராவிட்டால், எழுதிக் கொடுத்த கடிதத்தை கிழித்து போட்டு விட்டு, உன் மீது எப்.ஐ.ஆர்., போட்டு விடுவேன். உன் வீட்டு ரேஷன் கார்டை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து விட்டு போ. 1,500 ரூபாய் பணத்தை கொண்டு வந்து கொடுத்து விட்டு ரேஷன் கார்டை வாங்கிப் போ' என கூறியுள்ளார்.ஜோசப் ராஜ் இதனை தன் மனைவியிடம் சொல்லியுள்ளார்.
மனைவி வீட்டிற்கு சென்று ரேஷன் கார்டை எடுத்து வந்து போலீசில் கொடுத்துள்ளார். இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு ஜோசப் ராஜ் விடுவிக்கப்பட்டார். அவரிடம் எஸ்.ஐ., குணவதி, "நாளை எனக்கு இரவுப் பணி. நாளை மறுநாள் திங்கள் கிழமை மதியம் 2 முதல் இரவு 9 மணிக்குள் வந்து பணத்தை கொடுத்து விட்டு ரேஷன் கார்டை வாங்கிக் கொண்டு போ' என கூறினார்.உடனே ஜோசப் ராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று மாலை 5 மணிக்கு எம்.கே.பி., நகர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஓட்டலில் ஜோசப் ராஜ், எஸ்.ஐ., குணவதிக்காக காத்திருந்தார். ஜோசப் ராஜை ஆட்டோவில் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, பணத்தை வாங்கிக் கொண்டு ரேஷன் கார்டை கொடுத்துள்ளார்.
அப்போது மறைவிடத்தில் நின்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., சரஸ்வதி தலைமையிலான போலீசார், எஸ்.ஐ., குணவதியை கையும் களவுமாக கைது செய்தனர்.அவரிடமிருந்த 1,500 ரூபாய் பணம், ரேஷன் கார்டு, சி.எஸ்.ஆர்., ரெக்கார்டு புத்தகம் ஆகியவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்.ஐ., குணவதியின் வீட்டிலும் போலீசார் சோதனையிட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக