புதியவை :

Grab the widget  Tech Dreams

28 ஜூலை 2009

லஞ்சம் வாங்கியபோது கைதான இன்ஸ்பெக்டர் “சஸ்பெண்டு”

சென்னை மகாகவி பாரதியார் நகர் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கருணாநிதி. இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூலிப்பதாகவும் லஞ்சம் தராதவர்களை வழக்கு போடுவதாக மிரட்டு வதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தது.
இந்த நிலையில் இந்திரா என்ற பெண்ணிடம் இரவு டிபன் கடை நடத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். மொத்தமாக கொடுக்க முடியாவிட்டால் வாரம் ரூ.1250 வீதம் தருமாறு வற்புறுத்தினார். இல்லையென்றால் ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டி வந்தார். இதை யடுத்து இந்திரா லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்திராவிடம் ரூ.1250 லஞ்சம் பெற்றபோது, இன்ஸ்பெக்டர் கருணாநிதி கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டர் கருணாநிதி லஞ்சம் வாங்கியதாக கைதான ஆதாரங்களையும் தகவல் அறிக்கையும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் லஞ்ச வழக்கில் கைதான கருணாநிதி சஸ்பெண்டு செய்யப்படுவார் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் கருணாநிதி கைதானது குறித்து அந்த பகுதியில் உள்ள ஓட்டல் நடத்தும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பகுதியில் பாஸ்ட் புட் கடைக்கு ரூ.1000, பான்பராக், பீடா கடைக்கு ரூ.1,500, இரவு டிபன் கடைக்கு ரூ.500 என மாத மாமூல் வசூலித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக