புதியவை :

Grab the widget  Tech Dreams

06 ஆகஸ்ட் 2010

லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பை குறைத்து பத்திரப் பதிவு செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியைச் சேர்ந்தவர் அன்பழகன்(45). இவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கடுவஞ்சேரி பகுதியில் வீட்டுமனை வாங்கியுள்ளார். பத்திரப் பதிவு செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு சார்பதிவாளராக உள்ள தர்மபுரியைச் சேர்ந்த சுரேஷ்(47) என்பவரை சந்தித்தார். அவர், இடத்தின் மதிப்பை அதிகமாகக் கூறிவிட்டு குறைந்த மதிப்பிற்கு பத்திரப்பதிவு செய்து தர ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அன்பழகன் நேற்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கங்காதரன், சரவணன், வெங்கடேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். பின், ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுகளை அன்பழகனிடம் கொடுத்து சார்பதிவாளரிடம் கொடுக்கும்படி அனுப்பினர். அவர், பணத்துடன் நேற்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு சார்பதிவாளர் சுரேசை சந்தித்து பணத்தை கொடுத்தார். அவரும் பெற்றுக் கொண்டார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுரேசை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கடந்த மூன்று வருடங்களில் ஐந்து முறை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்துள்ளனர். நடப்பான்டில் இது வரை இரண்டு முறை சோதனை நடத்தியுள்ளனர். சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை அதிகப்படுத்தி கூறுகின்றனர். பின், குறைத்து பத்திரப்பதிவு செய்வதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு அரசு வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கின்றனர். விவரம் புரியாமல் மக்களும் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக