புதியவை :

Grab the widget  Tech Dreams

07 ஆகஸ்ட் 2010

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கி இதுவரை கைதானவர்கள் 500 பேர்! போட்டோக்களை வெளியிட அரசு முடிவு


தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்தி வரும் அதிரடி வேட்டையில், 500க்கும் மேற்பட்ட லஞ்ச அதிகாரிகள் கையும், களவுமாக பிடிபட்டுள்ளனர்.


லஞ்ச அதிகாரிகளை பொறி வைத்து பிடிப்பதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லஞ்சம் வாங்கி சிக்குபவர்களின் தகவல்களை, புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


"லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்' என, அனைத்து அரசு அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்கும். ஆனால், லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த வேலையை முடிக்க இவ்வளவு பணம் என்று அறிவிப்பு பட்டியல் வைக்காத குறையாக லஞ்சம் தாண்டவமாடுகிறது. அரசு அலுவலகங்களில் சாதாரண உதவியாளர் முதல் தலைமையிட உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது.


இந்நிலையில், அரசு அலுவலகங்களில் தலை தூக்கியுள்ள லஞ்ச, லாவண்யங்களை ஒடுக்க தமிழக அரசு களம் இறங்கியுள்ளது. இது தொடர்பான அரசின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிரமாக களமிறங்கினர். இதன் பயனாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், இதுவரை லஞ்சத்தில் புரண்டு வந்த சாதாரண ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை 500க்கும் மேற்பட்டோர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.


கடந்த 2007-08ம் ஆண்டில் 127 பேர், 2006-07ம் ஆண்டில் 131 பேர், 2005-06ம் ஆண்டில் 136 பேர் என சராசரியாக 100 முதல் 150 பேர் வரை போலீஸ் பிடியில் கையும், களவுமாக சிக்கியுள்ளனர். இந்த வகையில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு புகார்களின் அடிப்படையில், 312 வழக்குகளில் அதிகாரிகள் லஞ்சம் பெறும் போது, போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பிடும் போது இது மூன்று மடங்கு அதிகம். லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகளின் தகவல்களை புகைப்படத்துடன், இணையதளத்தில் வெளியிட தற்போது அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 5,186 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1,527 வழக்குகளில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறும் போது, கையும், களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர். இதைத் தவிர 1,028 வழக்குகள் ஆரம்ப நிலையிலும், 1,739 வழக்குகள் விரிவான விசாரணையிலும், 892 வழக்குகள் ரெகுலராகவும் நடந்து வருகின்றன. கடந்த 2008ம் ஆண்டு மார்ச் வரை எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கோர்ட் நிலுவையில் இருந்த 877 லஞ்ச வழக்குகளில், 1,866 அரசு அலுவலர்களிடமும், தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்த 385 வழக்குகளில், 1,182 பேரிடமும், துறை ரீதியாக நிலுவையில் உள்ள 4,662 வழக்குகளில், 3,546 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதும் விசாரணை அளவிலேயே உள்ளன.


தண்டனை நிச்சயம் :லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் சிக்குவார்களே தவிர, அவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்ற கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால், லஞ்ச அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். "தமிழகம் முழுவதும், 2008-09 ஆண்டில், பல்வேறு கோர்ட்டுகளில் நடந்து வரும் பல்வேறு லஞ்ச வழக்குகளில் 40 வழக்குகளுக்கு இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.கோவை மாநகராட்சி ஜூனியர் இன்ஜினியர் ஒருவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 62 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல வழக்குகளில் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது' என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2 கருத்துகள்: