புதியவை :

Grab the widget  Tech Dreams

04 ஆகஸ்ட் 2010

ராணுவ வீரரிடம் 10 ஆயிரம் லஞ்சம் , எஸ்ஐ கைது.


தேசத்திற்காக பாடு பட்ட ஒரு அப்பாவி முன்னாள்ராணுவ வீரனின் உடையை களைய சொன்ன எஸ்ஐ



ஆவடி, ஆக 4


‘கடுமையான பிரிவுகளில் வழக்கு போடாமல் இருக்க, பத்தாயிரம் தர வேண்டும்’ என்று கூறி, மாஜி ராணுவ வீரரிடம் பணம் பறித்த திருமுல்லைவாயல் எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.


திருமுல்லைவாயல் தந்தை பெரியார்நகர் வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் துரைசாமி(58). முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஐசிஎப்பில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றுகிறார். இவரது மனைவி தாமஸ்மேரி (48).

இவர்களது எதிர் வீட்டில் வசிக்கும் தம்பதி வடிவேலு, சத்யா.


கடந்த 28&ம்தேதி அப்பகுதியில் மழை பெய்தது. துரைசாமி வீட்டு மாடியில் தேங்கிய தண்ணீரை திறந்துவிட்டபோது அது தெருவில் வழிந்தோடி வந்து வடிவேலு வீட்டருகே தேங்கியதாக தெரிகிறது. இதுசம்பந்தமாக, தாமஸ்மேரிக்கும் சத்யாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இதுபற்றி வடிவேலு, திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, துரைசாமியை அழைத்து விசாரணை நடத்திய சப் இன்ஸ்பெக்டர் ஸ்டா ன்லி ஜோன்ஸ் ஏகத்துக்கும் பேசியிருக்கிறார். ‘எக்ஸ் மிலிட்டரின்னா பக்கத்து வீட்டுக்காரன்ட்ட வம்பிழுப்பீ ங்களா? லோக்கல் போலீஸ் பவர பத்தி தெரிஞ்சுக்கணுமா? கன்னாபின்னானு கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்’ என்று கடுமையாக விசாரித்திருக்கிறார். பின்னர், ‘சரி.. சரி.. மிலிட்டரிகாரன மதிக்கணும்னு பாக்கிறேன். இனிமே, மழைத் தண்ணிய வடிவேலு வீட்டுப் பக்கம் போகாம பாத்துக்கங்க.. நான் அவங்கள சமாளிச்சுக்கறேன். பெட்டி கேஸ் போட்டு விட்டுர்றேன். பத்தாயிரம் ரெடி பண்ணிட்டு வாங்க..’ என்கிறரீதியில் விசாரணையை முடித்திருக்கிறார். இதையடுத்து, தகாத வார்த்தையால் பேசியதாக துரைசாமி மீது லேசான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 10ஆயிரம் ரூபாயை இரண்டு நாட்களில் தந்து விடுமாறு துரைசாமியிடம் எஸ்ஐ சொல்லி அனுப்பியிருக்கிறார்.


லஞ்ச ஒழிப்புதுறை ஐ.ஜி. துக்கையாண்டியின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை துரைசாமி கொண்டு சென்றார். ஐ.ஜி. உத்தரவின்பேரில் டிஎஸ்பி பொன்னுசாமி வழக்கு பற்றி துரைசாமியிடம் புகாரைப் பெற்று விசாரித்தார். அதிகாரிகள் கொடுத்த ஐடியாபடி, துரைசாமி ரூ.10 ஆயிரத்துடன் திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்துக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வந்தார். இரவு ரோந்து பணிக்கு செல்லத் தயாராக இருந்த சப்&இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜோன்ஸிடம், ‘சார், நீங்க கேட்ட பணத்த கொண்டு வந்துருக்கேன்’ என்றார்.


‘ஸ்டேஷனுக்கு வெளியில என்னோட பைக் நிக்குது. பைக் கவர்ல பணத்த வச்சுட்டுப் போய்டுங்க..’ என்று எஸ்.ஐ. கூறியிருக்கிறார். எஸ்.ஐ. சொன்னது போலவே, பணத்தை வைத்துவிட்டு நகர்ந்தார் துரைசாமி. சிறிதுநேரத்திலேயே அங்கு வந்த எஸ்ஐ, பணத்தை எடுத்து தனது பாக்கெட்டில் திணித்தார். அப்போது பாய்ந்துவந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், எஸ்ஐயை மடக்கிப் பிடித்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.


திருவள்ளூர் நீதிமன்றத்தில் இன்று காலையில் எஸ்ஐ&யை ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.


முன்னாள் ராணுவ வீரர் கண்ணீர் :

சாலையில் மழைத் தண்ணீர் ஓடுவது தொடர்பாக என்னுடைய மனைவிக்கும் வடிவேலு மனைவி சத்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. வடிவேலு புகார் கொடுத்தார். கடந்த 28ம்தேதி மாலை 5 மணிக்கு திருமுல்லைவாயல் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். நானும் போனேன். சுமார் 4 மணி நேரம் காக்க வைத்தனர். இரவு 9.30 மணிக்கு பிறகு எஸ்.ஐ. விசாரித்தார்.

வீட்டுப் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சின்ன தகராறு. பேசி தீர்த்துக் கொள்ளலாம். நான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று சொல்லிப் பார்த்தேன். நான் சொன்ன எதையும் எஸ்ஐ காதில் வாங்கவே இல்லை. ‘முதல்ல சட்டை, பேன்ட்டை கழற்றிட்டு அப்படி உட்கார்..’ என்று மிகவும் உதாசீனப்படுத்தினார். ராணுவத்தில் பணியாற்றிய என்னை அசிங்கப்படுத்தாதீர்கள் என்று கூறியதோடு, டிரஸ்சையெல்லாம் கழற்ற முடியாது என்று மறுத்து விட்டேன். நான் சொல்கிறபடி கேட்காவிட்டால், கேஸ் போடுவேன். ஐசிஎப்ல வேலை பார்க்க விட மாட்டேன் என்று எஸ்ஐ மிரட்டினார். உனக்கு வாரிசு இல்லாமல் செய்துவிடுவேன் என்றும் அச்சுறுத்தினார். பின்னர் 11 மணிக்கு மேல் வீட்டுக்கு அனுப்பினார்கள்.

மறுநாள் காலையிலும் ஸ்டேஷனுக்கு வர வைத்தார்கள். ‘உன்ன பத்தி விசாரிச்சுட்டேன்.. பென்ஷன் வருது.. ஐசிஎப்லயும் நல்ல சம்பளம்.. பிரச்னை இல்லாம கேச முடிச்சுக்கணும்னா, 10 ஆயிரம் ரூபாய் குடு. லேசா கேஸ் போட்டு வெளில விட்டுர்றேன்’ என்றார்.

இரண்டு நாள் கடும் மன உளைச்சலில் இருந்தேன். பணம் கேட்டதைக் கூட பெரிதாக நினைக்கவில்லை. ஸ்டேஷனில் வைத்து அந்த எஸ்.ஐ. என்னை நடத்திய விதத்தால் பெரிதும் அவமானப்பட்டு விட்டேன். அதனால்தான் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் கொடுத்தேன். இவ்வாறு துரைசாமி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக