31 அக்டோபர் 2009
மதுகோடா வீட்டில் வருமான வரி அதிகாரிகள் இன்று சோதனை
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி மதுகோடா. 2006-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2008 ஆகஸ்ட் வரை இவர் முதல்-மந்திரியாக பணி புரிந்தார். மதுகோடா முதல்-மந்திரியாக இருந்த காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், லைபிரியா ஆகிய நாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்து இருந்தார். அவரும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்று இருந்த கமலேஷ் சிங், பானு பிரதாப், பாண்டுதிர்கே ஆகியோர் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுகோடா லைபிரியா வில் ரூ.8.5 கோடி மதிப்பில் கனிமவளங்களை வாங்கி இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து மது கோடா மற்றும் முன்னாள் மந்திரிகள் 3 பேர் மீது அமலாக்கப் பிரிவினர் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மாநில நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. கடந்த
9-ந்தேதி அவர்கள் மீது வழக்கு பதிவானது.
இந்த நிலையில் ராஞ்சியில் உள்ள மதுகோடா வீட்டில் வருமான வரி அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். மேலும் சாய்பாசாவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அவரது உறவினர்கள், முன்னாள் மந்திரிகள் கமலேஷ் சிங், பானு பிரதாப், பாண்டு திர்கே ஆகியோரது வீடுகள், உறவினர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரே நேரத்தில் 65 இடங்களில் இந்த அதிரடி வேட்டை நடந்தது. சோதனை விவரங்களை தற்போது தெரிவிக்க இயலாது என்று வருமான வரி அதிகாரி தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக