05 அக்டோபர் 2009
பைக்காரா படகு இல்லத்தில் மோசடி லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை .
ஊட்டி: பைக்காரா படகு இல்லத்தில், படகு சவாரி டிக்கெட்டுகளை "மறு சுழற்சி' மூலம் நூதன முறையில் மோசடி செய்தது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர். ஊட்டி அருகேயுள்ள பைக்காரா பகுதியில், கடந்த 1996ம் ஆண்டு படகு இல்லம் அமைக்கப்பட்டது.
தூய்மையான நீர் மற்றும் ரம்மியமான இயற்கை காட்சி இடையே படகு இல்லம் உள்ளதால், இங்கு படகு சவாரி மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போது, படகு இல்லத்தில் சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளிடம் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் சிலர், ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் கொடுத்தனர். ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., பெரோஸ்கான் உத்தரவின் படி, ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில், பைக்காரா படகு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர்.
படகு சவாரிக்காக டிக்கெட் பெறும் சுற்றுலாப் பயணிகளிடம், மறு சுழற்சி முறையில் டிக்கெட் விற்று பணம் வசூலித்ததும், படகு இல்ல ஊழியர்கள், தனியார் புரோக்கர் ஒருவரை வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. டிக்கெட் கவுன்டரில் விற்பனையான டிக்கெட் மற்றும் வசூலிக்கப்பட்ட தொகைக்கும் வேறுபாடு இருந்துள்ளது. 20 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். மோசடி நடந்தது ஊர்ஜிதமானதால், படகு ஓட்டுனர்கள், புரோக்கர், ஊழியர்கள் மற்றும் மேலாளரிடம், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பைக்காரா படகு இல்ல மோசடியில், அரசுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது, விசாரணை முடிந்த பின் தான் தெரியவரும், பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும், என ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., பெரோஸ்கான் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக