திருச்சி, அக்.14-
திருச்சி மாநகராட்சி 57-வது வார்டு கவுன்சிலராக உள்ளவர். வனிதா மாநகராட்சி அ.தி.மு.க. கொறடாவாகவும் முன்பு இருந்தார்.
இவரது வார்டுக்கு உட்பட்ட அண்ணாமலை நகரில் மாநகராட்சி சார்பில் தார்சாலை அமைக்க ரூ.8 1/2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரோடு போடும் பணி தொடங்கப்பட்டது. ரூ.5லட்சம் மதிப்புக்கு சாலை போடப்பட்ட நிலையில் ரோடு குறுக்கே தனியார் ஒருவர் காம்பவுண்டு சுவர் எழுப்பி அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தாராம்.
எனவே திருச்சி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, உதவி இயக்குனரிடம் அந்த இடத்தை அளந்த அரசு நிலத்தை மீட்டு ரோடு போட உதவுமாறு கவுன்சிலர் வனிதா கடந்த 13.11.2008ல் மனு கொடுத்தார்.
உடனே இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி உதவி கலெக்டருக்கு உதவி இயக்குனர் பரிந்துரை செய்தார். ஆனால் இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ரோடு போடும் பணி தாமதம் ஆகியது. எனவே நேற்று முன்தினம் வனிதா உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார்.
அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை எழுத்தரான ரோஷலின் மாலினியை (வயது54) சந்தித்து தனது புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவரம் கேட்டார். அப்போது பெண் அதிகாரி ரோசலின் மாலினியை தன்னை திருவானைக்கோவிலில் உள்ள வீட்டில் வந்து சந்திக்கும்படி கூறினார்.
அங்கு சென்று அவரை சந்தித்த போது ரோசலின் வனிதாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தந்தால் வேலையை முடித்து தருவதாக கூறினாராம். உடனே கவுன்சிலர் வனிதா மக்களுக்காக ரோடு போட நடவடிக்கை எடுக்கும் நாங்கள் உங்களுக்கு எதுக்கு பணம் தர வேண்டும் என கேட்டார்.
ஆனால் ரோசலின் மாலினி ரூ.10 ஆயிரம் பணம் தராவிட்டால் காரியம் நடக்காது என கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா லஞ்சம் கேட்ட ரோசலின் மாலினிக்கு பாடம் புகட்ட நினைத்தார்.
உடனே இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. அம்பிகாபதியிடம் புகார் செய்தார்.
போலீசார் கூறிய அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டு ரூ.10 ஆயிரத்தை நேற்று கவுன்சிலர் வனிதா ரோசலின்யிடம் கொடுத்தார். அதை தனது கணவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்குமாறு ரோசலின் மாலினிகூறினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் லபக்கென்று 2 பேரையும் கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கி பிடிபட்ட ரோசலின் மாலினி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மக்களுக்காக ரோடு போட முயன்ற அ.தி.மு.க. பெண் கவுன்சிலரை 11 மாதம் அலையவிட்ட பெண் ஊழியர் பண ஆசையால் கடைசியில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக