06 அக்டோபர் 2009
500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் கைது .
திண்டிவனம்: சிட்டா அடங்கல் வழங்க விவசாயிடம் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(44). விவசாயி.
இவரது மனைவி அமுதாவிற்கு உரிமையுள்ள சொத்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மண்டம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ளது. இந்த சொத்து தொடர்பாக திண்டிவனம் சப்-கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. கோர்ட்டில் தாக்கல் செய்ய அமுதாவின் சொத்து தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு(2006-08) சிட்டா அடங்கல் நகல் பெற கடந்த 30ம் தேதி ராஜகோபால் திண்டிவனம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.
சிட்டா அடங்கல் நகல் வழங்க தாலுகா அலுவலக பதிவறை எழுத்தர் ராமானுஜம், 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். 500 ரூபாய் தருவதாக ராஜகோபால் பேரம் பேசியுள்ளார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ராஜகோபால் நேற்று காலை புகார் செய்தார். மாலை 5.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுதர்சனன் தலைமையிலான குழுவினர் திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பதிவறை எழுத்தர் ராமானுஜத்திடம் ரசாயன பவுடர் பூசப்பட்ட 500 ரூபாயை ராஜகோபால் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அலுவலகத்திற்குள் சென்று, ராமானுஜத்தை கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக