09 அக்டோபர் 2009
இதுக்கு லஞ்சமே கொடுத்துடலாமே...!
கோவை, : "சாதாரண சாதிச் சான்றிதழ் வாங்குவது முதல் பெரிய வேலைகளை முடிப்பது வரை எதுக்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறாங்கப்பா' என்று அரசு அலுவலகங்கள் பற்றி குறை சொல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலானோர் கேட்டதைக் கொடுத்துவிட்டு வந்துதான் பழக்கம்!
அதையும் மீறி சிலர், லஞ்சம் கொடுக்க பணமில்லாமல் அல்லது மனமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்தால் நிலைமை மேலும் மோசமாகி விடுகிறது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸôரிடம் புகார் கொடுத்தால், லஞ்சம் வாங்குவோரைக் கையும் களவுமாகப் பிடிக்க திட்டம் வகுக்கப்படும். இதன்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார்தாரர் கொடுக்கும்போது போலீஸôர் அவர்களைக் கைது செய்வர். மேலும் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் நீதிமன்றத்தில் மிக முக்கியமான சான்றாவணமாக எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை புகார் கொடுப்பவர் தான் கொண்டு வர வேண்டும். லஞ்சம் கேட்கும் நபர் எவ்வளவு தொகை கேட்டாரோ அத் தொகையைக் கொண்டு வரவேண்டியது புகார்தாரரின் பொறுப்பு. ஆனால், அவ்வாறு கொண்டு வரப்படும் பணத்தை திரும்பப் பெற புகார்தாரர்கள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.
"லஞ்சம் வாங்குவோர் குறித்து புகார் கொடுக்கும்போது பலரது எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதோடு லஞ்சம் வாங்குவோரைப் பிடிப்பதற்காக அளிக்கப்படும் தொகை திரும்பக் கிடைப்பது தாமதமாவதால், புகார் கொடுத்தவர்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டதைப் போல ஆகிவிடுகிறது. இதற்கு லஞ்சமே கொடுத்துவிட்டு போயிருக்கலாமோ என்று தோன்றுகிறது' என்கின்றனர் பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள்.
"லஞ்சம் கொடுக்கக் கூடாது என பொதுமக்களை வலியுறுத்தி பிரசாரம் செய்கிறோம். லஞ்சம் கேட்பவரை போலீஸôரிடம் புகார் தெரிவிக்கும்போது, அவரைப் பிடிப்பதற்கான தொகையை புகார்தாரரே கொண்டு வரவேண்டியுள்ளது. இத் தொகை குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்' என்கிறார் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகி கந்தசாமி.
கோவை மாவட்டத்தில் மட்டும் 13 ஆண்டுகளுக்கு முந்தைய லஞ்ச வழக்குகளில் சம்பந்தப்பட்ட தொகை, புகார்தாரர்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருக்கிறது என்கிறார் கோயமுத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன்.
இதேநிலை தமிழகம் முழுவதும் இருக்கிறது. லஞ்சம் வாங்குவோரைப் பிடிக்க ரசாயனம் தடவி பயன்படுத்தும் தொகையை, புகார்தாரருக்கு அளிக்க வேண்டும் என 1992-லேயே அரசு உத்தரவு உள்ளது. ஆனால், இத் துறைக்கென நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் அந்த உத்தரவு பின்பற்றப்படுவதில்லை. நீண்டகாலமாக வழங்கப்பட வேண்டிய தொகையை புகார்தாரர்களுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து புகார்தாரருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதைக் கணக்கெடுத்தால் தான் பிரச்னையின் தீவிரம் தெரியவரும் என்றார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு அவர் வேண்டுகோள் அனுப்பியுள்ளார்.
நன்றி: தினமணி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக