22 அக்டோபர் 2009
ரூ.5 ஆயிரம் லஞ்சம் :கலால் உதவி ஆணையர் நடராஜன் கைது
திருவள்ளூர், அக். 22: திருவள்ளூர் அருகே மதுபானக் கடை "பார்'-ஐ இடமாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கலால் உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் மணிபாஸ்கர் (41). இவரது சகோதரர் குமார் மதுரவாயல் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் "பார்' வைத்திருந்தார். அந்த பாரை அப்பகுதியில் உள்ள கன்னியம்மன் நகருக்கு இடமாற்றம் செய்யக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கலால் உதவி ஆணையர் நடராஜனிடம் மனு கொடுத்துள்ளார். இதையடுத்து இடமாற்றத்துக்கு அனுமதியளிக்க ரூ.25 ஆயிரம் வரை நடராஜன் லஞ்சம் கேட்டதாக கூறப்பட்டது. மணிபாஸ்கர் கடந்த 1-ம் தேதி ரூ.10 ஆயிரமும், 2-ம் தேதி ரூ.10 ஆயிரமும் லஞ்சமாக பெற்றாராம். மேலும் 5 ஆயிரம் கொடுத்தால்தான் அனுமதி தருவேன் என நடராஜன் கண்டிப்பாக கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள சிறப்பு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி முரளியிடம், மணிபாஸ்கர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியம், சங்கர் ஆகியோர் கொண்ட குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப் படி, மணிபாஸ்கர் கலால் உதவி ஆணையர் நடராஜனிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுக்கும்போது, போலீசார் நடராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக