புதியவை :

Grab the widget  Tech Dreams

17 அக்டோபர் 2009

பொதுத் துறை நிறுவனங்களுக்கு யு.எஸ். நிறுவனங்கள் லஞ்சம்: விசாரணைக்கு உத்தரவு



மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து வாணிப வாய்ப்புகளைப் பெறுவதற்காக, அந்நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறப்பட்ட புகாரின் மீது மத்திய புலனாய்வுக் கழகம் விசாரணை நடத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பது அதிகரித்து வருவதாக அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தின் விவரங்களை எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஊடகங்களுக்குத் தெரிவித்தது மட்டுமின்றி, அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.மீரா சங்கர் எழுதிய கடிதத்தின் நகலை ஊடகங்களுக்கு பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்டது. அந்தக் கடிதத்தில் மராட்டிய மாநில மின்சார வாரியம், இந்தியன் இரயில்வே, மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் ஆகியவற்றின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் விவரம் கோரியுள்ளது.இந்திய பொதுத் துறை நிறுவனமான மத்திய பூச்சிக் கொல்லி வாரியத்திற்கு அமெரிக்க நிறுவனமான டோவ் ஆக்ரோ சயின்சஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக