புதியவை :

Grab the widget  Tech Dreams

04 அக்டோபர் 2009

நெஞ்சக நோய் மருத்துவ கூடுதல் இயக்குனர் கைது.

சென்னை : லேப் சூப்பர்வைசர், லேப் அசிஸ்டென்ட் பணியிடத்திற்கு லஞ்சம் வாங்கிய, நெஞ்சக நோய் மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குனர் சுப்புராம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். லஞ்சப் பணத்துடன் ரயிலில் வந்த அரசு டாக்டர், அவரது உதவியாளர், மதுரை புரோக்கரும் கைதாகினர். நான்கு பேரிடம் இருந்து 20 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., (மருத்துவத் துறை தலைமை அலுவலகம்) வளாகத்தில், மருத்துவத் துறை இயக்குனர் உள்ளார். அவருக்கு கீழ், கூடுதல் இயக்குனர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களில் ஒருவரான இ.எஸ்.ஐ., (தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரத் துறை) இயக்குனர் எழிலரசி, லஞ்சம் வாங்கிய வழக்கில், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில், மருத்துவத்துறை அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கும் தகவல், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜத்திற்கு கிடைத்தது.மருத்துவத் துறையின் தலைமை இயக்குனருக்கு கீழ் பணியாற்றும், கூடுதல் இயக்குனர்கள், துணை இயக்குனர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டார். எஸ்.பி., லட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.


சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் நெஞ்சக நோய் மருத்துவ பணிகள் துறையின் கூடுதல் இயக்குனர் சுப்புராம் (52) உள்ளார். வளாகத்தில் உள்ள, "கெஸ்ட் ஹவுசில்' தங்கியுள்ளார். இவரது குடும்பத்தினர் திருநெல்வேலியில் தங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட காசநோய் மருத்துவத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்வேல் முருகன் (48). இவரது அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் தகவல்களை பதிவு செய்யும் ஊழியர் பாலமுருகன் (32). இவர்கள் இருவரும், கன்னியாகுமரி, திருநெல்வேலியில் லேப் சூப்பர்வைசர், லேப் அசிஸ்டன்ட் போன்ற காலியிடங்களுக்கு, தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீதம் பலரிடம் வசூலித்தனர்.மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் தொழில் செய்து வருபவர் ரவீந்திரா (50). இவர், சென்னையில் உள்ள மருத்துவ கூடுதல் இயக்குனர் சுப்புராமுக்கு பணம் வசூலித்துக் கொடுத்து வந்துள்ளார்.


கன்னியாகுமரி டாக்டர் செந்தில்வேல் முருகன், பாலமுருகன், மதுரையைச் சேர்ந்த ரவீந்திரா ஆகியோர் கன்னியாகுமரியில் இருந்து ரயிலில் சென்னைக்கு, லஞ்சப் பணத்துடன் வரும் தகவல், போலீசாருக்கு கிடைத்தது.லஞ்ச ஒழிப்பு தனிப்படை போலீசார் கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் கண்காணித்தனர். நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் இருந்து ரயிலில் செந்தில்வேல் முருகனும், பாலமுருகனும் புறப்பட்டனர்.அந்த ரயில் மதுரை வந்ததும், அவர்களுடன் ரவீந்திராவும் ஏறிக்கொண்டார். மூன்று பேரிடமும் மூன்று, பைகள் இருந்தன. மூன்று பேரையும் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைது செய்ய, போலீசார் திட்டமிட்டனர்.தாம்பரத்திற்கு ரயில் வந்தபோது, "ஏசி' கோச்சில் ஏறிய போலீசார், "நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். உங்களது உதவி தேவை. இந்த கோச்சில் பயணிக்கும் செந்தில்வேல் முருகன், பாலமுருகன், ரவீந்திரா ஆகியோரை அடையாளம் காட்ட வேண்டும்' என, டிக்கெட் பரிசோதகரிடம் கூறினர்.


"ஏ1' கோச்சில் அமர்ந்திருந்த மூன்று பேரையும், ரயில் பரிசோதகர் அடையாளம் காட்டினார். அப்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்த ரயில் புறப்பட்டு எழும்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.மூன்று பேரும் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்த பயணிகளை, வேறு இடத்தில் அமருமாறு டி.எஸ்.பி.,கள் கேட்டுக்கொண்டனர். மூன்று பேர் வைத்திருந்த மூன்று, பைகளில் சோதனை நடத்தினர்.அதில், கட்டுக்கட்டாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அது தவிர மூன்று பேரது சட்டை, பேன்ட் பாக்கெட்கள், உள் பாக்கெட்களில் இருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்தது.அவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரும், "டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள நெஞ்சக மருத்துவ பணிகள் துறை கூடுதல் இயக்குனர் சுப்புராமின் வீடு உள்ளது. அவரை சந்தித்து இந்த லஞ்ச பணத்தைக் கொடுக்க வந்தோம்' எனக் கூறினர்.


மூன்று பேரிடமும், 17 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மூன்று பேரையும் அழைத்துக்கொண்டு, சுப்புராம் வீட்டிற்கு சென்றனர்.சுப்புராம் வீட்டில், சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரது வீட்டில், மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ரயிலில் கொண்டு வரப்பட்ட மற்றும் வீட்டில் இருந்த மொத்த பணம், 20 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்.யார், யாரிடம் எவ்வளவு பணம் வாங்கப்பட்டது என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஐகோர்ட் முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி தேவதாஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்று, நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினர். நான்கு பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார். லஞ்ச வேட்டையில் சிக்கிய நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


"இன்டர்வியூ கால்லெட்டர்' :கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு லஞ்சப் பணத்துடன் வந்த அரசு டாக்டருடன் சேர்த்து மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய சோதனையில்இரண்டு ஆயிரம் ரூபாய் கட்டுக்கள் உட்பட பல லட்சம் ரூபாய் பணம் இருந்தது. ஒரு கட்டின் மேல் வெள்ளை பேப்பர் இருந்தது. அதை, டி.எஸ்.பி.,கள் பிரித்து பார்த்தனர். அது, மருத்துவத் துறையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்ட, "இன்டர்வியூ கால்லெட்டர்' என தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக