புதியவை :

Grab the widget  Tech Dreams

09 அக்டோபர் 2009

புழல் சிறைக்குள் கத்தி, கஞ்சா, லஞ்சப் பணம் சிக்கியது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை


சென்னை புழல் சிறைக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், கத்தரிக்கோல், கத்தி, ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணம் கஞ்சா, பீடிக் கட்டுகள் உட்பட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புழல் சிறையில் மூன்று பிளாக்குகள் உள்ளன.



கோடிக்கணக்கான ரூபாய் மோசடி வழக்கில் சிக்கிய நபர்கள், சிறைக்குள் சொகுசு வாழ்க்கை நடத்தும் தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்றது. புழல் சிறைக்குள் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி., போலோநாத், கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டனர். எஸ்.பி.,க்கள் லட்சுமி, பவானி ஈஸ்வரி தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் ஆகியோருடன் 14 இன்ஸ்பெக்டர்கள், 40க்கும் மேற்பட்ட போலீசார், தனித்தனி வாகனங்களில் புழல் சிறைக்கு முன்பாக சில நூறு மீட்டர் தள்ளி நின்றனர். கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம், "புழல் சிறைக்குள் சென்று சோதனை நடத்தவுள்ளோம்.



அதற்கு உங்கள் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்' என, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தரிடம் கூறியுள்ளார். சிறைக்குள் செல்ல அனுமதி கிடைத்ததை அடுத்து, தனிப்படை போலீசார் புழல் சிறை -2 பிளாக்கிற்குள் நுழைந்தனர். அப்பிளாக்கில் 1,500 க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். சிறை எஸ்.பி., ராஜேந்திரன், கூடுதல் எஸ்.பி., கருப்பணன், ஜெயிலர் இளவரசன், விஜிலென்ஸ் போலீசாரின் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.



சிறைக் கைதிகள் நேர்காணல் நடைபெறும் பகுதியில் நடந்த சோதனையில், உதவி ஜெயிலர் ராஜேந்திரன் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் ரூபாய் நோட்டுகள் சொருகி வைக்கப்பட்டிருந்தன. 3,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு மற்றும் தடா கைதிகள் அடைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு சிறையில் நடந்த சோதனையில், சிறை வார்டன் சிவசங்கரனிடம் இருந்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொறு சிறை வார்டன் நாகராஜன் என்பவரிடம் இருந்து 250 ரூபாய் பணம் சிக்கியது.



சிறையில் உள்ள அறைகளில் நடந்த சோதனையில், தலையணை மற்றும் போர்வைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்திரிக்கோல், கத்தி ஆகியன சிக்கின. தண்டனைக் கைதி ஆறுமுகம்(54) என்பவரின் அறையில் இருந்து, சிறைத்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களது பதவி குறிப்பிடப்பட்ட "ஆபீஸ் சீல்'கள் சிக்கின. சிறையில் உள்ள கைதிகளுக்கு எந்தவகை உணவு வழங்க வேண்டும் என, சிறைத்துறை டாக்டர் சோமசுந்தரம் சிபாரிசு செய்வார். அசைவ உணவு மற்றும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க 50, 100 ரூபாய் லஞ்ச பணம் வசூலித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.



சிறை டாக்டரிடம் இருந்து 1,800 ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பீடிக் கட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு சிறைக் கைதிகள் அவர்களது அறையில் சொந்த செலவில் "டிவி' வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். சிறையில் உள்ள கேபிள் "டிவி' வசதி, அந்த நான்கு கைதிகளும் முறைகேடாக தரப்பட்டிருந்தையும் கண்டுபிடித்தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக