07 அக்டோபர் 2009
நான்கு வழிச்சாலை நிலம் கையகப்படுத்துதல்: ரூ.17 லட்சம் மோசடி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில், நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில், 17 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட வி.ஏ.ஓ.,வை சஸ்பெண்ட் செய்தும், மூன்று தாசில்தார்கள் மீது (17 பி) குற்ற நடவடிக்கை எடுத்தும் கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 45ல் நான்கு வழிச் சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த, தனி அலுவலகம் அமைக்கப்பட்டு, இதற்கு பொறுப்பாளராக தாசில்தார்கள் பஷீர் அகம்மது, பாலசந்திரன், துணை தாசில்தார் ஜான்சன் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூலம், சம்பந்தப்பட்டவர்களுக்கு நிலத்திற்குரிய நஷ்டஈடு வழங்கப்பட்டது. வி.ஏ.ஓ., தாசில்தார்கள் கையெழுத்திட்டு நிலத்திற்குரிய உரிமையாளரை முடிவு செய்கின்றனர். இவ்வாறு முடிவு செய்பவர்களுக்கு டி.ஆர்.ஓ., மூலம் செக் வழங்கப்படும்.
இதில், திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியைச் சேர்ந்த ஒருவருக்கு, 17 லட்சம் ரூபாய்க்கு இழப்பீடாக செக் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளருக்கு வழங்காமல், இடத்திற்கு சம்பந்தமில்லாத நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு 17 லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் புகார் கூறினார். இது குறித்து, கலெக்டர் வள்ளலார் விசாரித்தார். இதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தாமரைப்பாடி வி.ஏ.ஓ., ஜான்சிராணியை சஸ்பெண்ட் செய்தும், தாசில்தார்கள் பஷீர்அகம்மது, பாலசந்திரன், துணை தாசில்தார் ஜான்சன் ஆகியோர் மீது 17(பி) ஒழுங்கு நடவடிக்கை குற்ற ஆணை பிறப்பித்தும் கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடந்த சம்பவங்களுக்கும் டி.ஆர்.ஓ.,வுக்கும் சம்பந்தமில்லை. ஒரு டி.எஸ்.பி.,யின் வற்புறுத்தலின் பேரில் தான், 17 லட்சத்திற்கான செக் வழங்கப்பட்டுள்ளது. செக்கை வாங்கிய நபர், பணத்தை தரமறுக்கிறார். தான் கோர்ட்டிற்கு செல்வதாக மிரட்டுகிறார். நிலத்தில் பிரச்னை இருப்பது தெரியாமல் எப்படி செக் வினியோகிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக