புதியவை :

Grab the widget  Tech Dreams

21 ஆகஸ்ட் 2009

திருத்தணி ஆர்.டி.ஓ சந்திரசேகரன் கைது


லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், திருத்தணி ஆர்.டி.ஓ., சந்திரசேகரன் எப்படி சிக்கினார் என்பது குறித்து, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. திருத்தணி ஆர்.டி.ஓ., வாக, சந்திரசேகரன் பணியாற்றி வந்தார்.

அரசு அனுமதியின்றி கல்குவாரி நடத்தி வரும் பாபுவிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, இவரை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., விஜயராகவன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர், கல்குவாரி அதிபர் பாபுவிடம் ஏற்கனவே லஞ்சமாக பெற்ற வாஷிங் மிஷின், பிரிட்ஜ் ஆகிய பொருட்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், ஆர்.டி.ஓ.,வின் சொந்த ஊரான செங்கல்பட்டு பெரிய மணியக்கார தெருவில் உள்ள அவரது வீட்டில், நேற்று அதிகாலை 2 மணிக்கு சோதனை தொடங்கியது. காலை 8 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பணமோ, நகைகளோ சிக்கவில்லை. பின்னர், ஆர்.டி.ஓ., சந்திரசேகரனை திருவள்ளூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை 15 நாள் காவல் வைக்க உத்தரவிட்டார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான ஆர்.டி.ஓ., ஏற்கனவே, சென்னை தலைமை அலுவலக நுகர்பொருள் வாணிப கழகத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அங்கு வேலை செய்யும் சக ஊழியர்களை மதிக்காமலும், மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கும் ஆளானார். இதை அடுத்து அவர் திருத்தணிக்கு மாற்றப்பட்டார். கடந்த வருடம் டிசம்பர் 1ம் தேதி, திருத்தணி ஆர்.டி.ஓ.,வாக நியமனம் செய்யப்பட்டார். திருத்தணியிலும், ஊழியர்களை அடிக்கடி ஒருமையில் திட்டுவதும், அதிகாரிகளை மதிக்காமலும் இருந்து வந்தார்.

பொதுமக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வேலை முடித்துக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வார். திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இதில் ஒரு சில கல்குவாரிகள் மட்டும் அரசு அனுமதியுடன் இயங்குகிறது. மற்றவை அரசு அனுமதி பெறாமல் செயல்படுகிறது. இதையறிந்த ஆர்.டி.ஓ., கல்குவாரி அதிபர்களை அழைத்து பெறவேண்டியதை பெற்றுக்கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக அவைகள் செயல்பட அனுமதி அளித்து வந்துள்ளார்.

அரக்கோணம் ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த பாபு(32) என்பவரிடம்," நீ கல்குவாரி தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் எனக்கு பிரிட்ஜ், வாஷிங் மிஷன் வாங்கித் தர வேண்டும்' என்றும், "10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டும்' என்றும் கூறினார். அதற்கு அவரோ, நாளை தருவதாக கூறி சென்றார். அவர் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், நேற்று முன்தினம் காலை புகார் கொடுத்தார்.

புகாரின் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டப்படி அதே தினம் இரவு, ஆர்.டி.ஓ.,விடம் பாபு பணம் கொடுக்கும் போது கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையில், ஆர்.டி.ஓ., பலரிடம் லஞ்சத்தை பணமாக வாங்காமல், பொருட்களாக வாங்கி குவித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. திருத்தணி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக