சென்னை: வீட்டை இடித்து கட்டுபவரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ.,) திட்ட உதவியாளர் கைது செய்யப்பட்டார்
சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் சேகரன். பர்னிச்சர் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறார். தனக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்துவிட்டு, அருகில் காலியாக உள்ள இடத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டத் திட்டமிட்டார். இதற்கு அனுமதி கேட்டு சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பித்தார்.
புதிய கட்டடம் கட்டும் திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ.,வுக்கு 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தினார். அதை பரிசீலித்து, மாநகராட்சிக்கு அந்த பைலை அனுப்பாமல், சி.எம்.டி.ஏ., திட்ட உதவியாளர் ராஜசேகரன் (56) கிடப்பில் போட்டார். அதற்கு 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இது குறித்து, லஞ்ச ஒழிப்பு த்துறை எஸ்.பி., பவானி ஈஸ்வரியிடம் சேகரன் புகார் அளித்தார். டி.எஸ்.பி., பொன்னுச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் இமானுவேல் ஞானசேகர், உச்சப்பட்டி பரமசாமி, அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று மாலை காத்திருந்தனர். ரசாயன கலவை தடவப்பட்ட லஞ்சப் பணத்தை எடுத்துச் சென்ற சேகரனிடம், பணத்தை வாங்காத ராஜசேகரன், தரைத்தளத்தில் உள்ள கேன்டீனுக்கு அழைத்து சென்று டீ வாங்கிக்கொடுத்தார்.
அப்போது லஞ்ச பணத்தை வாங்கியபோது, விஜிலென்ஸ் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். போலீசாரிடம் ராஜசேகரன், "சார்! நான் மிரட்டி லஞ்சம் வாங்கவில்லை. அவரே விருப்பப்பட்டு அன்பளிப்பாகத் தான் கொடுத்தார். என்னை கைது செய்யாதீர்கள்' என கெஞ்சினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக