ஆண்டிப்பட்டி, ஆக. 20-
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள ராஜகுமாரி என்ற ஊரை சேர்ந்தவர் ரகுபதி (வயது47). இவர் தனது கடையில் பணியாற்றி வரும் பிள்ளையார் (39) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்று கடைக்கு தேவையான ஜவுளிகளை கொள்முதல் செய்தார்.
பின்பு ஜவுளிகளை பஸ்சில் ஏற்றி விட்டார். தனது பணியாளருடன் மோட்டார் சைக்கிளில் மதுரையிலிருந்து ராஜகுமாரி சென்றார். ஆண்டிப்பட்டி போலீஸ் சோதனை சாவடியில் இரவு நேர காவலராக கண்டமனூரில் பணியாற்றி வரும் தியாகராஜன் என்ற போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஆவ ணங்களை சோதனை செய்தபோது எல்லாம் சரியாக இருந்தது.
உடனே அதிகவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக கூறிய தியாகராஜன், இதற்கு ரூ.2 ஆயிரம் அபராதமாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டியதிருக்கும் என்று மிரட்டி ரூ. 1000 லஞ்சமாக கொடுத்தால் விட்டு விடுவதாக தெரிவித்தார்.
தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிள்ளையாரிடம் இருந்த செல்போன், ஆர்.சி. புக் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை போலீஸ்காரர் தியாகராஜன் பறிமுதல் செய்து கொண்டார். ரூ.1000 லஞ்சம் கொடுத்து ஆவணங்களை பெற்று கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தார்.
இதில் அதிர்ச்சி அடைந்த ஜவுளி வியாபாரி ரகுபதி, தேனி துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரசாமியிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் அடங்கிய குழுவை அனுப்பி இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை ரசாயனம் தடவி ரகுதிபதியிடம் கொடுத்து அனுப்பினார். லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்ட போலீஸ் தியாகராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக