21 ஆகஸ்ட் 2009
உதவி மின் பொறியாளர் துரைராஜ் கைது - மின்இணைப்புக்கு லஞ்சம்
சரவணம்பட்டி: சரவணம்பட்டியை அடுத்த சின்னவேடம்பட்டியில், லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர், ஊழல் ஒழிப்பு போலீசாரின் பொறியில் சிக்கி கைதானார். கோவை, மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி தனபாக்கியம் . இவருக்கு உடையாம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில் வீடு உள்ளது. வீட்டின் ஒரு பகுதியை வர்த்தக உபயோகத்திற்கான பகுதியாக மாற்றிக் கட்டிய இவர், வீட்டு உபயோக பிரிவிலிருந்த மின் இணைப்பை வர்த்தக இணைப்புக்கு மாற்றுவதற்காக, சின்னவேடம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
இந்த நடைமுறைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.125 தான். ஆனால் இணைப்பு (டாரிப்) மாற்றம் செய்ய 1,600 ரூபாய் லஞ்சம் தருமாறு உதவி மின் பொறியாளர் துரைராஜ் கேட்டார். பத்து நாட்களுக்கு முன் 1300 ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு விண்ணப்பம் தந்த துரைராஜ் நேற்று வரை மின் இணைப்பு மாற்றிக் கொடுக்கவில்லை. இது பற்றி கேட்ட போது, மீதி 300 ரூபாயும் தந்தால் தான் மின் இணைப்பை மாற்ற முடியும் என வற்புறுத்தியுள்ளார். இதனால் வேதனையடைந்த தனபாக்கியம், ஊழல் ஒழிப்பு துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச அதிகாரியை பொறி வைத்து பிடிக்கத் திட்டமிட்டனர்.நேற்று மீதி 300 ரூபாய் லஞ்சத் தொகையை பெற்றபோது, துரைராஜ் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவரது வீட்டில் சோதனையிட்ட போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக