மதுரை எல்லீஸ்நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் இசக்கி ஆனந்தன், மணிமாறன், ரமேஷ், ஜெயக்குமார் ஆகியோர் சோதனை நடத்தினர். இதில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த புரோக்கர்கள் பத்மநாபன் (38), மதுரை தெற்குவாசலை சேர்ந்த சுப்பிரமணியன் (40) ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பத்மநாபன், சுப்பிரமணியனை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி வில்லியம், ""நீங்கள் இருவரும் எங்கு வேலை பார்க்கிறீர்கள்,'' என கேட்டார். அதற்கு புரோக்கர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து, ""நாங்கள் எல்லீஸ்நகர் ஹவுசிங் போர்டில் புரோக் கர்களாக உள்ளோம். விதிமுறைகளை மீறி சலுகையை பயன்படுத்தி பத்திரங்களை வாங்கி கொடுக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்குவோம்.
மாலை 7 மணியளவில் வீட்டிற்கு புறப்பட தயாராக இருக்கும் ஊழியர்களிடம் பங்கு தொகையை பிரித்து கொடுப்போம்,'' என்றனர். இருவரையும் வரும் 1ம் தேதி வரை ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார். வீட்டு வசதி வாரியத்தில் பத்மநாபன் தற்காலிக ஊழியராக சில ஆண்டுகள் வேலை பார்த்தவர். புரோக்கர் தொழிலை பத்தாண்டுகளாக செய்து வருகிறார். சுப்பிரமணியன் மூன்று ஆண்டுகளாக புரோக்கர் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக