புதியவை :

Grab the widget  Tech Dreams

05 ஆகஸ்ட் 2009

சென்னைத் துறைமுக "மாஜி' தலைவர் சுரேஷ் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு


சென்னை: சென்னைத் துறைமுக "மாஜி' தலைவர் சுரேஷ் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.வங்கி லாக்கர், வீடுகளில் நடந்த சோதனையில், இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின. அதில் 3.5 கிலோ தங்க நகைகள், 6,400 அமெரிக்க டாலர்கள். கர்நாடகாவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், மத்திய பிரதேச "கேடர்' ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மத்திய அரசு மாற்றுப் பணியில் 2004ம் ஆண்டு, சென்னைத் துறைமுக கழகத் தலைவராக பொறுப்பேற்றார்.


கடந்த ஜூன் 30ம் தேதி வரை அப்பணியில் இருந்தார். தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சேது சமுத்திரத் திட்டத் தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். மத்திய அமைச்சர் பாலுவிடம் நெருக்கமாக இருந்துள்ளார். இரண்டாவது கன்டெய்னர் டெர்மினல், நிலக்கரி மாசால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கையாளும் திட்டம் போன்றவை, இவரது காலத்தில் செய்யப்பட்ட முக்கிய பணிகள்.



இதில், கன்வேயர் மூலம் நிலக்கரி கையாளும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து சென்னைத் துறைமுக கழகத் தலைவராக இருந்த சுரேஷ் மீண்டும் மத்திய பிரதேசத்திற்கு அழைக்கப் பட்டார். தற்போது மருத்துவ விடுப்பில், சென்னைத் துறைமுகத்தில் உள்ள துறைமுகத் தலைவருக்கான பங்களாவில் சுரேஷ், தொடர்ந்து வசித்து வருகிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல், தென்னாப்ரிக்காவில் இருந்து புறப்பட்டது.



அக்கப்பலில் போதிய பாதுகாப்பு காரணிகள் இல்லாததால், தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்து சென்னை வந்த அக்கப்பலை, முறைகேடாக 2007ம் ஆண்டு முதல் இதுவரை துறைமுகத்தில் நிறுத்த சுரேஷ் அனுமதித்தார். சென்னைத் துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டுக் கப்பல்கள், துறைமுகத்தில் நிறுத்த (பெர்த்) இடமில்லாமல் பல மாதங்களாக துறைமுகத்திற்கு வெளியே, சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப் பட்டுள்ளன.



துறைமுகத்தில் நிற்கும், "சாஜ் சார்ஜா' என்ற அக்கப்பலில் எந்த ஊழியர்களும் தற்போது இல்லை. துருப்பிடித்து, இயக்க முடியாத நிலையில் உள்ள அக்கப்பல், ஏலம் விட்டு உடைக்கும் நிலையில் உள்ளது. சிங்கப்பூர் நிறுவன கப்பலை துறைமுகத்தில் முறைகேடாக நிறுத்திய வகையில், சென்னைத் துறைமுகத்திற்கு 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன், சுரேஷ் மீது பல்வேறு முறைகேடுகள் எழுந்தன.



ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அவரது வீட்டில் நுழைந்தனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை நடந்தது. துறைமுக மாஜி தலைவர் சுரேஷ், துறைமுக பாதுகாப்பாளர் ஜின்னா, போக்குவரத்து மேலாளர் வெங்கடேஸ்வரலு உள்ளிட்டோரின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.



சுரேசுக்குச் சொந்தமாக சென்னை நகர், கிழக்கு கடற்கரைச் சாலை, கொடைக்கானல், பெங்களூருவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன. வீடுகளில் நடந்த சோதனையில் 3.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.தங்க நகைகள், சொத்து ஆவணங்களின் மொத்த மதிப்பு இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய் என சி.பி.ஐ., போலீசார் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க டாலர் வைத்திருந்த சுரேஷ் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு, கூட்டு சதி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் சி.பி.ஐ., போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக