புதியவை :

Grab the widget  Tech Dreams

03 ஆகஸ்ட் 2009

தொழிலாளர் துறை பெண் சப் இன்ஸ்பெக்டர் உமா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

நாகர்கோவில் : ரேஷன் கடை ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை சப் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்தனர். அவரிடம் இந்து 6650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாத கடைசி நாளில் அடுத்த மாதத்திற்கான ஒதுக்கீடுகள் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் வழங்கப்படும். இவ்வாறு ஒதுக்கீடுகள் வழங்க வரும் ரேஷன் கடை ஊழியர்களிடம் தொழிலாளர் துறை அதிகாரிகள் மிரட்ட பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது.
இதன்படி அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கடைகளுக்கான ஒதுக்கீடுகளை பெற வந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் நாகர்கோவில் 1வது சரகம் தொழிலாளர் துறை பெண் சப் இன்ஸ்பெக்டர் உமா மிரட்டி பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான இட ஒதுக்கீடுகளை பெறுவதற்கு நேற்று ரேஷன் கடை ஊழியர்கள் நாகர்கோவில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர். தாலுகா அலுவலக வளாகத்தின் அருகில் ஒரு ஆட்டோவில் இருந்த தொழிலாளர் துறை சப் இன்ஸ்பெக்டர் உமா, அங்கு வரும் ஊழியர்களிடம் 50, 100 ரூபாய் என வசூலித்துக்கொண்டிருந்தார்.
இதுகுறித்த தகவலின்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான துணை ஆய்வு குழு அலுவலர் நாராயணன், கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் மறைந்து நின்று கண்காணித்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் உமா லஞ்சம் வாங்கும் போது அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பெண் போலீசாரின் உதவியுடன் அவரது உடமைகளை சோதனையிட்ட போது கணக்கில் வராத 6650 ரூபாய் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர் சரியான விவரம் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவிலில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன்னால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரியை கைது செய்த தகவல் அறிந்து அந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைப்போல் கடந்த மாதம் கடைசி நாளான 20ம் தேதி விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இந்த மாதம் தொழிலாளர் துறை சப் இன்ஸ்பெக்டர் சிக்கியுள்ளார். இதைப்போல் தொடர்ந்து திடீர் சோதனை நடத்தி லஞ்சம் பெறுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக