மதுரை: மதுரை மாட்டுத்தாவணி வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர் தங்கராஜ், லஞ்சப்பணத்தில் 27 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தெரியவந்ததையடுத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த அலுவலகத்தில் நேற்று முன் தினம் மாலை லஞ்சஒழிப்புத் துறை டி.எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். புரோக்கர்கள் முத்துபாண்டி, விக்னேஷ்வர், செந்தில்குமாரிடம் கணக்கில் வராத 18,650 ரூபாய் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அந்த பணம் அலுவலக கண்காணிப்பாளர் மனோகர், வாகன ஆய்வாளர் தங்கராஜூக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து நேற்றிரவு கே.கே.நகரில் உள்ள தங்கராஜ் வீட்டில் சோதனை நடந்தது. ஐந்து வங்கிகளில் 27 லட்சம் ரூபாய்க்கு நிரந்தர வைப்புத் தொகை செய்திருந்ததற்கான 58 ரசீதுகள் கைப்பற்றப்பட்டன.
இரவு முழுவதும் லஞ்சஒழிப்பு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. நேற்று மாலை கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். லஞ்சஒழிப்பு போலீசார் கூறுகையில், ""தங்கராஜ் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் வந்ததையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பதிவு எண், ஆர்.சி., புக் இல்லாமல் காரை உபயோகித்த கண்காணிப்பாளர் மனோகருக்கும், இதில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க உள்ளோம். புரோக்கர்களை கட்டுப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவோம்,'' என்றனர்.
உறவினர் வீட்டில் ரசீதுகள்: "என்றைக்காவது ஒரு நாள் லஞ்சஒழிப்பு போலீசில் சிக்குவோம்' என்று கருதிய தங்கராஜ், மதுரை டோக்நகரில் வசிக்கும் தனது உறவுக்கார பெண்மணி செல்வம் வீட்டில், வங்கிகளில் டெபாசிட் செய்ததற்கான பல ஆவணங்களை பதுக்கியிருக்கிறார். இதையும் லஞ்சஒழிப்பு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக