சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள, பத்திரப்பதிவு மற்றும் மோட்டார் வாகன அலுவலகங்களில் நேற்று ஒரே நாளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் அரக்கோணத்தில் மட்டும் கணக்கில் வராத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது.
வேளச்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள், வில்லங்க சான்றிதழ் உட்பட எல்லா வேலைக்கும் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. கூடுதல் எஸ்.பி., ஜெயபாலன், டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையில் சென்ற தனிப்படை போலீசார், நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அலுவலகத்தில் புரோக்கர்களாக 13 பேர் செயல்பட்டனர். போலீசாரை கண்டதும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் லஞ்சப் பணத்தை அலுவலக வளாகத்தில் தூக்கி எறிந்தனர்.அதை போலீசார் பறிமுதல் செய்தனர். அலுவலகத்தில் முறைகேடான வகையில் இருந்த முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். புரோக்கர்களுடன் தொடர்பு வைத்திருந்த அலுவலர்கள் பற்றி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பவுள்ளனர்.
அயனாவரம்:அயனாவரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், டி.எஸ்.பி., பொன்னுச்சாமி தலைமையிலான தனிப் படையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அலுவலகத்திற்குள் இருந்த புரோக்கர்களிடம் இருந்து ஆர்.சி., புத்தகங்கள் சிக்கின. வாகன வரி, பெயர் மாற்றம், டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களின் போட்டோக்களுடன், 200 பேரது விண்ணப்பங்களும் சிக்கியுள்ளன
அரக்கோணம்:அரக்கோணத்தில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராமேஸ்வரி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் தட்சிணாமூர்த்தி, நந்தகோபால், வேலு ஆகியோர் தலைமையில், 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அரக்கோணம் இணை சார் பதிவு அலுவலகத்தில் திடீர் ரெய்டு நடத்தினர்.அரக்கோணத்தில், சார் பதிவாளராக முத்து சரஸ்வதி பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் மேலும் 10 ஊழியர்கள் பணி புரிகின்றனர். இதில், இரவு 7 மணி வரை கணக்கில் வராத பணமாக, இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சார் பதிவாளர் முத்து சரஸ்வதியிடம் கைப்பற்றினர். மேலும், நள்ளிரவை தாண்டியும் இந்த சோதனை நடைபெற்றதால், ஐந்து லட்ச ரூபாய்க்கும் மேல் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றக் கூடும் என தெரிகிறது.
குன்னூர்: குன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று (24ம் தேதி) மாலை 4.00 மணிக்கு, ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அலுவலக கதவை அடைத்த போலீசார் அலுவலக ஊழியர்களிடம் இருந்த பணத்தை கைப்பற்றி, அந்த பணம் எந்த வகையில் வந்தது என்பது குறித்து விசாரித்தனர்.அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். பத்திரப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்களையும் விசாரித்தனர். இரவு 8.00 மணியைத் தாண்டியும் ஆய்வு நடந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவது தெரியவந்தது.
நாகூர்: நாகூர் பத்திர பதிவு அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், புரோக்கர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., மாணிக்கவாசகம், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சித்திரைவேல் தலைமையிலான போலீசார், நேற்று மாலை 4 மணிக்கு துணை பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலக கதவுகளை பூட்டி அங்கிருந்த அனைவரையும் சோதனை செய்தனர். பத்திர பதிவிற்கு புரோக்கர்களாக செயல்பட்ட சரவணப்பெருமாள் (48), சிவராஜ்(45), ராஜ்குமார்(42) ஆகியோரிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து நான்காயிரத்து 490 ரூபாய் வைத்திருந்ததை கைப்பற்றினர். அவர்களிடம் விசாரணை செய்ததில் வருமானத்திற்கான காரணத்தை கூறாததால் மூவரையும் கைது செய்தனர். தொடர் சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றினர்.இதுதொடர்பாக, துணைப் பதிவாளர் காந்திமதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சார் பதிவாளர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 53 ஆயிரத்து 575 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக சார் பதிவாளர் செந்தில்குமார், அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்களாகச் செயல்பட்ட பத்திர எழுத்தர்கள் வெங்கடேசன், சரவணன், பிரபு, பாரதிதாசன், செந்தில்குமார், பாலசுப்ரமணியம், லட்சுமணன், சங்கர், நாகராஜன், செல்வி, செல்வராணி, ராதா, முத்துலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புதுகையிலும், சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 4 மணிக்கு துவக்கிய சோதனை இரவு வரை நீடித்தது. பத்திர எழுத்தாளர்கள் சிவகுமார், குருசாமி, நாகலட்சுமி, கருப்பையா இவர்களிடமிருந்து எட்டாயிரத்து 550 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.தஞ்சை சிவகங்கை பூங்கா அருகிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி., ரங்கராஜன், இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார், நேற்று மாலை 4 மணியளவில் அதிரடியாய் நுழைந்தனர். இரவு வரை சோதனை நீடித்தது.
பத்திரபதிவு அலுவலகத்தில் சோதனை சார்பதிவாளர் உட்பட நால்வர் கைது : திண்டுக்கல் : திண்டுக்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில்விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தியதில் பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் வெங்கடசாமி உட்பட 4 பேர்கைதுசெய்யப்பட்டனர். திண்டுக்கல் நாகல்நகர் பத்திரப்பதிவு அலுவலகத் தில் நேற்று மாலை 6 மணிக்கு விஜிலென்ஸ் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.சார்பதிவாளர் வெங்கடசாமி,உதவியாளர் ரத்தினசாமி, பத்திர எழுத் தர்கள் சேகர், சரவணவேல் உட்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணக்கில் காட்டப்படாத பல ஆயிரம் ரூபாய் அலுவலகத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் மேல் விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் கூறியதாவது: நாங்கள் நேற்று பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கணக்கில் காட்டப்படாத பல ஆயிரம் ரூபாய்மற்றும் ஆவணத்தை கைப்பற்றியுள்ளோம். இதில் தொடர்புடையவர் கள் யாராக இருந்தாலும் நாங்கள் கைது செய்வோம் என்றார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு : ராமநாதபுரத்தில் ரூ.20,000 பறிமுதல் :
ராமநாதபுரம் :தேனி, ராமநாதபுரம், சிவகங்கை பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ராமநாதபுரத்தில் 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டு, இரவு முழுவதும் விசாரணை நடந்தது.சென்னை உட்பட தமிழகத்தில் நேற்று மாலை 4மணிக்கு பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வெளிபட்டினம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அலுவலர் களின் கையிலிருந்த மற்றும் அலுவலகத்திலிருந்த பணத்தை கைப்பற்றி ஆவணங்களையும் போலீசார் சோதனை செய்தனர். அப்பகுதியில் உள்ள பத்திர எழுத்தர்களிடமும், சார் பதிவாளர் குணசேகரன் உட்பட அலுவலர்களிடமும் விசாரணை நடத்தினர். இரவு முழுவதும் சோதனை மேற்கொண்டதில் 20ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. டி.எஸ்.பி.,கலாவதி கூறுகையில்,"" அலுவலகத்தில் முறைகேடுகள் நடந்து உள்ளதா என்பது குறித்த விபரங்கள், சோதனை முழுமையாக முடிந்தபின் தெரிய வரும்'' என்றார்.
தேனி: தேனி என்.ஆர்.டி., மெயின் ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இரவு ஏழு மணி வரை சோதனை நடந்தது.
திருப்புவனம்: திருப்புவனம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் கந்தராஜன், பத்திர எழுத்தர், பத்திர விற்பனையாளர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர். தேவைக்கு அதிகமான பணம் வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டது. இரவு 8 மணி வரை சோதனை நடந்தது.
திருநெல்வேலி: நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணத்துடன் நின்றுகொண்டிருந்த புரோக்கர் கள் சங்கரன், சோமசுந்தரம் ஆகிய இருவர் சிக்கினர். பத்திரப்பதிவு அலுவலர் அருணாசலம், போலீசாரை கண்டதும் 3 ஆயிரத்து 515 ரூபாயை பக்கத் தில் நின்றுகொண்டிருந்த ஒரு ஊழியரின் கையில் திணிக்க முயன்று பிடிபட்டார். போலீசை கண்டதும் ஊழியர்கள் அலுவலகம் முழுவதும் ஆங்காங் கே மூலை முடுக்குகளில் போட்டு வைத்திருந்த 6 ஆயிரத்து 85 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் திடீர் சோதனை : திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கணக்கில் வராத பணம் 27 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.திருக்கழுக்குன்றம் கம்மாளர் வீதியில், சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வுக்குழு அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில், போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வெங்கடேசன், கலைச்செல்வன் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அலுவலகத்தில், சார்பதிவாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஆறு ஊழியர்கள் இருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் புரோக்கர்கள் அலுவலகத்தில் இருந்து தப்பியோடினர். போலீசார் அலுவலகத்தை மூடிவிட்டு சோதனை நடத்தினர். அப்போது பதிவேடுகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கணக்கில் வராத பணம் 27 ஆயிரம் ரூபாய் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பணத்திற்கு ஊழியர்கள் கணக்கு காண்பிக்கவில்லை. அதைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அலுவலகம் அருகில் உள்ள கிணறு, திறந்தவெளி பகுதியிலும் போலீசார் சோதனை செய்தனர். இரவு 7 மணிக்கு சோதனை முடிந்தது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகாசி ஊர்நல விரிவாக்க அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார் : சிவகாசி : சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய ஊர்நல விரிவாக்க அலுவலர் சிக்கினார். திருத்தங்கல்லைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கும், படிக்காசுவைத்தான்பட்டியை சேர்ந்த முத்துக்குமாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. முத்துக்குமார் ஸ்ரீவி., யில் உள்ள சலூனில் பணியாற்றி வருகிறார். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலகத்தில் திருமண உதவித்தொகை கேட்டு விஜயலட்சுமி ஜூன் 18ல் விண்ணப்பித்தார். அரசு அனுமதித்த உதவித்தொகையை வெம்பக்கோட்டை, இ.மீனாட்சிபுரம் ஊர்நல அலுவலர் சுப்புலட்சுமியிடம்(50)யிடம் கேட்டார். 1000 ரூபாய் லஞ்சம் கேட்ட சுப்புலட்சுமியின் நெருக்கடி பற்றி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 900 ரூபாயை நேற்று மாலை 4 மணிக்கு சுப்புலட்சுமியிடம் கொடுத்தார். பின்னர் வெளியில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சிக்னல் கொடுத்தார். போலீசார் அலுவலகத்திற்குள் வந்து சுப்புலட்சுமியை சோதனை செய்த போது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களையும், விஜயலட்சுமியின் திருமண உதவித் தொகை விண்ணப்பத்தையும் காணவில்லை. அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்தும் கிடைக்கவில்லை. பெண் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெண் போலீசார் சுப்புலட்சுமியின் ஆடைகள் முழுவதையும் சோதனை போட்டும் ரூபாயும், விண்ணப்பமும் கிடைக்கவில்லை.அதன் பின்னர் சுப்புலட்சுமியை தண்ணீரில் கைகழுவ சொன்ன போது கைகழுவியதில் ரசாயனம் கையில் இருந்தது தெரியவந்தது. இருந்தும் சுப்புலட்சுமி லஞ்சம் பெறவில்லை என மறுத்ததால் அந்த அலுவலகத்திற்கு பூட்டி சீல் வைத்தனர். சுப்புலட்சுமியை கைது செய்து செய்தனர். இதனால் சுப்புலட்சுமி வாந்தி எடுத்து மயக்கம் வருவது போல் நடித்தார். இதனால் அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை நடந்தும் லஞ்சமாக கொடுத்த பணத்தையும், விண்ணப்பத்தையும் போலீசார் கோட்டை விட்டனர்
மதுரை பத்திரப்பதிவு ஆபீசில் லஞ்சம்இணை சார்பதிவாளர், புரோக்கர் கைது : ரூ.ஒரு லட்சம் பறிமுதல் : மதுரை : மதுரை பழங்காநத்தம் பை-பாஸ் ரோடு ரவுண்டானா அருகே பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்த இணை சார்பதிவாளர், புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.இங்கு நேற்று மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் இசக்கி ஆனந்தன், மணிமாறன், ரமேஷ், ஜெயக்குமார், மாவட்ட ஆய்வுக்குழு துணை அலுவலர் குமார், துணை தாசில்தார் (தெற்கு) மோகனாள் தலைமையில் சோதனை செய்தனர். எழுத்தர் கண்ணனிடம் புரோக்கராக வேலை செய்த ஜெய்ஹிந்த்புரம் முத்துக்குமாரிடம் (40) 95 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது. அவர் சமயநல்லூரை சேர்ந்த ஆசிரியர் ராஜாராம் பத்திரம் வாங்குவதற்காக 70 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக தெரிவித்தார். அரசு பதிவுக் கட்டணம்படி வசூலான பில் தொகை, பணப்பெட்டியில் இருப்பு தொகையை சரிபார்த்தபோது கணக்கில் வராத 3599 ரூபாய் கூடுதலாக இருந்தது. பத்திரப்பதிவு செய்வோரின் சொத்தின் மதிப்பிற்கேற்ப லஞ்சம் வாங்குவதாக புரோக்கர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படியும், கணக்கில் வராத 3599 ரூபாய் வைத்திருந்த தெற்குவாசலை சேர்ந்த இணை சார்பதிவாளர் (பொறுப்பு) திருஞானம்(40) மற்றும் முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். அலுவலக உதவியாளர் சுப்புலட்சுமி (57) மேஜையின் அருகே தரையில் கிடந்த 1300 ரூபாய் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 399 ரூபாயை பறிமுதல் செய்தனர். சுப்புலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் ஆறு பேர் பணிபுரிகின்றனர். பணிப்பளுவின் காரணமாக திருஞானம் ஏற்பாட்டின் படி கூடுதலாக ஆறு பெண்கள், இரு ஆண்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர். தினமும் வசூலாகும் லஞ்ச பணத்திலிருந்து பெண்களுக்கு தலா 120, ஆண்களுக்கு தலா 200 ரூபாய் அவர் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர்இசக்கி ஆனந்தன்,""முத்துக்குமார் சொல்வது போல், தான் லஞ்சமாக பணம் எதுவும் கொடுக்கவில்லை என ஆசிரியர் ராஜாராம் மறுத்துவிட்டார்,'' என்றார். இதேபோல் திருமங்கலம் அருகே கப்பலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திலும் நேற்று காலை திடீர் சோதனை செய்தனர். அங்கு சில ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக