திருச்சி, ஆக.25-
தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருச்சியில் திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையிலான போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை போட்டனர்.
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சோதனை நடந்தது. அப்போது சார்-பதிவாளர் மேஜை ஊழியர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கணக்கில் வராத லஞ்சப் பணம் ரூ.53 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த பணத்தை பத்திர பதிவுக்காக வருபவர்களிடம் லஞ்சமாக சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் பெற்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக சார் பதிவாளர் செந்தில்குமார், அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், எழுத்தர்கள், வெங்கடேசன், சரவணன், பிரபு, பாரதிதாசன், செந்தில்குமார், பால சுப்பிரமணியன், லட்சுமணன், நாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் செல்வி, செல்வராணி, ராதா, முத்துலட்சுமி ஆகிய 4 பெண்களும் கைது செய்யப்பட்டனர். கைதான 15 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே போன்று தஞ்சாவூரில், சிவசங்கிரி பூங்கா, அலுவலகம் அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
அப்போது பத்திரபதிவுக்கு லஞ்சம் கொடுக்க வந்த தஞ்சை யாசப்பா நகரை சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 300 ரூபாயை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் கைப்பற்றினர்.
புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. அப்போது ரூ.8ஆயிரத்து 750 ரூபாய் லஞ்சப்பணம் சிக்கியது. இது தொடர்பாக பத்திர எழுத்தர்கள் சிவக்குமார், நாகலட்சுமி, குருசாமி, கருப்பையா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
திருச்சி- தஞ்சை, புதுக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலங் களில் ஒரே நாளில் நடந்த சோதனையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது போலீசாரரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பத்திரபதிவுக்கு செல்பவர்களின் பத்திரங்கள் ஒரு மேஜையில் இருந்து மற்றொரு மேஜைக்கு நகர குறைந்தது ரூ.1000 வரை லஞ்சம் பெற்று உள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு சென்ற போது பைல்களில் இருக்கும் பேப்பர்களுக்கு இடையில் என பணத்தை மறைத்து வைத்திருந்தனர். சிலர் போலீசார் பிடித்து விடாமல் இருக்க லஞ்சப்பணத்தை குப்பை கூடையில் போட்டு தப்ப முயன்றனர். மொத்தத்தில் பணத்தை ஏதோ சாதாரண பேப்பர் போல ஊழியர்கள் கையாண்டு உள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஒரே நாள் சோதனையில் 1 லட்சம் வரை லஞ்சப்பணம் சிக்கியது என்றால் ஒரு அலுவலகத்தில் மாதத்துக்கு 30 லட்சம் வரை லஞ்சம் புழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் ஊழியர்களும் எழுத்தர்களும் சொத்து குவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக